சென்னை: அதிமுக பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது சட்டவிரோதம் என்று அறிவிக்குமாறு தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
2022 ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும், பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று அறிவிக்க கோரியும், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சூரியமூர்த்தி, சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நிராகரிக்க கோரி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை உரிமையியல் நீதிமன்றம் ஏற்க மறுத்து, கடந்த ஜூலை மாதம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பழனிசாமி மேல்முறையீடு செய்தார்.
நீதிபதி பி.பி.பாலாஜி முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடந்தது. பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜயநாராயணன், “வழக்கு தொடர்ந்துள்ள சூரியமூர்த்தி அதிமுக உறுப்பினரே இல்லை என்பதால், உட்கட்சி விவகாரங்கள் தொடர்பாக வழக்கு தொடர அவருக்கு உரிமை இல்லை. இதே கோரிக்கை தொடர்பான வழக்குகளை ஏற்கெனவே உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் விசாரித்து உத்தரவிட்டுள்ளது. மீண்டும் அதே கோரிக்கையை மனுதாரர் எழுப்பியுள்ளார். இந்த வழக்கை நிராகரிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உரிமையியல் நீதிமன்றம் சரிவர கவனத்தில் கொள்ளாமல் தள்ளுபடி செய்துள்ளது” என்றார்.
சூரியமூர்த்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.வேல்முருகன், “சூரியமூர்த்தி ரூ.10 செலுத்தி உறுப்பினர் அட்டையை புதுப்பிக்கவில்லை என்பதற்காக, அவர் உறுப்பினரே இல்லை என்று கூறமுடியாது. கட்சி விதிகளின்படி அவர் அடிப்படை உறுப்பினராக நீடிக்கிறார். அதிமுக அடிப்படை உறுப்பினர்களால்தான் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற விதியை இஷ்டம்போல மாற்ற முடியாது. கட்சியின் அடிப்படை விதிகளுக்கு புறம்பாக பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாலும், பொதுக்குழு தீர்மானங்களும் கட்சி விதிகளுக்கு அப்பாற்பட்டு இருப்பதாலும் அவற்றை செல்லாது என அறிவிக்க கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது” என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பாலாஜி நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: இந்த மேல்முறையீட்டு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள வாதங்கள் ஏற்புடையதாக இருக்கின்றன. எனவே, சூரியமூர்த்தியின் வழக்கை நிராகரிக்குமாறு அவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உரிமையியல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறேன். அதேபோல, அதிமுக பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து சூரியமூர்த்தி உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கையும் நிராகரித்து உத்தரவிடுகிறேன். இவ்வாறு உத்தரவில் நீதிபதி தெரிவித்துள்ளார்.