சென்னை: சந்திர கிரகணம் வானில் நிகழும் அற்புதமான ஓர் அறிவியல் நிகழ்வு. இதை பொதுமக்கள் கண்டு ரசிக்கலாம், இதுதொடர்பாக பரப்பப்படும் மூட நம்பிக்கைகளை நம்பக்கூடாது என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில தலைவர் திருநாவுக்கரசு சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
வான்வெளியில் சூரியனை பூமி, சந்திரன் (நிலவு) உள்ளிட்ட கோள்கள் சுற்றி வருகின்றன. அவ்வாறு சுற்றும்போது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வருகையில் பூமியின் நிழல் சந்திரன் மீது விழுந்து, சந்திரன் மறையும். இது சந்திர கிரகணம் எனப்படுகிறது. அந்த வகையில் செப்டம்பர் 7-ம் தேதி அன்று நள்ளிரவு 11.01 மணிக்கு முழு சந்திர கிரகணம் நிகழ இருக்கிறது. இது 81 நிமிடங்கள் நீடிக்கும். அப்போது சந்திரன் ஆழ்ந்த சிவப்பு நிறமாக காட்சியளிக்கும். இந்த அற்புதமான அறிவியல் நிகழ்வை பொதுமக்கள் கண்டு ரசிக்கலாம்.
பொதுவாகவே, சந்திர கிரகணம் குறித்து உலகம் முழுவதும் பல்வேறு மூடநம்பிக்கைகள் நிலவுகின்றன. சந்திரனை பாம்பு விழுங்குகிறது. சந்திர கிரகணத்தை கர்ப்பிணிகள் பார்க்கக்கூடாது. உணவு சாப்பிடக்கூடாது என்பது எல்லாம் உண்மை அல்ல. சந்திர கிரகணம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு அறிவியல் இயக்கம், இந்திய வானியற்பியல் நிறுவனம், இந்திய கணித அறிவியல் நிறுவனம் ஆகியவை இணைந்து செயல்பட்டு வருகின்றன. சந்திர கிரகணத்தை தாராளமாக வெறும் கண்ணால் பார்க்கலாம். கர்ப்பிணிகள் பார்க்கலாம். உணவு சாப்பிடலாம். இதனால், எந்த பாதிப்பும் ஏற்படாது.
விழிப்புணர்வு கருத்தரங்கு: இது ஓர் அறிவியல் நிகழ்வு. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வருகிற 7-ம் தேதி அன்று அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு துண்டறிக்கைகளை விநியோகிக்க உள்ளோம். சமையல் செய்து சாப்பிட ஏற்பாடு செய்துள்ளோம். விழிப்புணர்வு கருத்தரங்குகளும் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.