சென்னை: ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம்:
முதல்வர் ஸ்டாலின்: நல்லாட்சி புரிந்த மாவலி மன்னனை நினைவுகூரும் கொண்டாட்டமாக மலையாளிகள் ஓணத்தைப் போற்றி வருகின்றனர். திராவிட உணர்வெழுச்சியுடன் தமிழகத்துக்கு உறுதுணையாக நின்று, தென்னகத்தின் தனிச்சிறப்பை பறைசாற்றும் மலையாள சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்த ஓணம் பொன்னோணமாக திகழ வாழ்த்துகள்.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: திருவோணத் திருநாளான இந்த நன்னாளில், இல்லம்தோறும் அன்பும், அமைதியும் நிலவட்டும். மகிழ்ச்சியும் செல்வமும் பெருகட்டும்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: அகந்தை அறவே அகற்றப்பட வேண்டும். ஒற்றுமை ஓங்கி வளர வேண்டும் என்ற உயரிய குறிக்கோளோடு கொண்டாடப்படுவது ஓணம் திருநாள். இந்த குறிக்கோளை அனைவரும் பின்பற்ற வேண்டும்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: எந்தவித வேறுபாடுமின்றி பண்பாடு, கலாச்சாரத்தை தனித்தன்மையுடன் காப்பாற்றி, சமூக நல்லிணக்கத்தோடு தமிழகத்தில் வாழ்ந்து வரும் மலையாள பெருமக்கள் அனைவருக்கும் ஓணம் திருநாள் வாழ்த்துகள்.
பாமக தலைவர் அன்புமணி: ஓணம் திருநாளை போலவே எல்லா நாட்களிலும் மக்கள் மகிழ்ச்சியாக வாழவும், அன்பு, அறம், அமைதி, சகோதரத்துவம், சமத்துவம், மனிதநேயம் ஆகியவை தழைத்தோங்கவும் வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், வி.கே.சசிகலா, முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசர் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் தலைமையில் பாஜகவினர் ஓணம் பண்டிகையை கொண்டாடினர். கல்லூரிகளிலும் ஓணம் விழா நேற்று கொண்டாடப்பட்டது.