சென்னை: திண்டிவனத்தில் பட்டியல் சமூக பணியாளரை திமுக கவுன்சிலர் காலில் விழவைக்கப்பட்ட சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திண்டிவனம் நகராட்சியில் பணிபுரியும் பட்டியல் சமூக ஊழியர் ஒருவரை, திமுக பெண் கவுன்சிலர் காலில் விழவைக்கப்பட்டதாக காணொலி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியியிருக்கிறது. இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து தலைவர்கள் கூறியிருப்பதாவது:
பாமக தலைவர் அன்புமணி: பட்டியலின பணியாளரை திமுவினரின் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்க செய்வது தான் திமுக கடைபிடிக்கும் சமூக நீதியா ? என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்க வேண்டும். குற்றம்சாட்டப் பட்டவர்கள் மீது கைதோ, கட்சி நடவடிக்கையோ மேற்கொள்ளப்படாததால் அவர்களின் செயலை திமுக தலைமை ஆதரிக்கிறதா ? என்பது தெரியவில்லை.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்: அரசு அலுவலகத்திலேயே நடைபெற்ற சாதிய வன்கொடுமையை வன்மையாக கண்டிக்கிறோம். பாதிக்கப்பட்டவர் அளித்த புகார் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கைதோடு, உரிய மேல்நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: மக்கள் நலனையும், ஊழியர்கள் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டிய கவுன்சிலரும், அவரோடு இருந்த கும்பலும் நடத்திய வன்முறைச் செயலை வன்மையாக் கண்டிக்கிறோம். பாதிக்கப்பட்டவரின் புகாரின் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து, அரசு அலுவலகத்தை வன்முறை களமாக மாற்றி, சாதி ஆதிக்கத்தை வெளிப்படுத்திய அனைவரையும் கைது செய்து, சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க விடாமல் தண்டிக்க வேண்டும்.
விசிக தலைவர் திருமாவளவன்: இது தமிழினத்தைத் தலைகுனியவைக்கும் வெட்கக்கேடான செயலாகும். இந்த இழிபோக்கை விசிக வன்மையாகக் கண்டிக்கிறது. அத்துடன், இதற்கு தொடர்புடைய அனைவர்மீதும் அரசு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.