சிவகாசி: மாணவர்களுக்கான நோட்டுப் புத்தகங் களுக்கு 12 சதவீதமாக இருந்த ஜிஎஸ்டி தற்போது முற்றிலும் நீக்கப்பட்டு, வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் இவற்றின் விலை குறையும் என்றும், காகிதம் மீதான வரி 18 சதவிகிதமாக உயர்வதால் காலண்டர்கள் விலை அதிகரிக்கும் என்று உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
சிவகாசியில் உள்ள 150-க்கும் அதிகமான அச்சகங்களில் சீசன் அடிப்படையில் நோட்டுப் புத்தகங்கள், பள்ளி பாடப் புத்தகங்கள், டைரிகள், காலண்டர்கள் ஆகியவை உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் 70-க்கும் மேற்பட்ட அச்சகங்கள் பிரத்தியேகமாக நோட்டுப் புத்தகங்கள் உற்பத்திப் பணியில் ஈடுபட்டுள்ளன. இதில் 20 முதல் 320 பக்கங்கள் வரை பல்வேறு வடிவங்களில் நோட்டுப் புத்தகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. இந்த ஆண்டு பேப்பர் விலை குறைவால் நோட்டுப் புத்தகங்களின் விலை 10 சதவீதம் வரை குறைந்தது.
இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த 56-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கல்வி உபகரணங்களான பென்சில், வரைபடம், சார்ட், நோட்டுப் புத்தகங்கள், வரைபட புத்தகம், ஆய்வக புத்தகம், பயிற்சிப் புத்தகம் மற்றும் இவை உற்பத்தி செய்ய பயன்படும் காகிதம் ஆகிய வற்றுக்கு விதிக்கப்பட்ட 12 சதவிகித ஜிஎஸ்டி வரி நீக்கப்பட்டு, வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள அச்சக உரிமையாளர்கள் மற்றும் நோட்புக் தயாரிப்பாளர்கள் இந்த வரி விலக்கு மூலம் நோட்டு புத்தகங்களின் விலை குறைய வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து சிமா நோட்புக் நிறுவன உரிமையாளர் மாரிராஜன் கூறுகையில், மாணவர்கள் பயன்படுத்தும் எழுது பொருட்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்களுக்கு வரிவிலக்கு அளிக் கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. நோட்டுப் புத்தகங்களுக்கான 12 சதவிகித ஜிஎஸ்டி வரி நீக்கப்பட்டது மாணவர்களுக்கு நேரடி பலனை அளிக்கும். ஆனால் பிற காகிதங்களுக்கான ஜிஎஸ்டி 12-ல் இருந்து 18 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. எந்தெந்த பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியில் என்னென்ன மாற்றங்கள் செய்யப் பட்டுள்ளன என்ற தகவல் வெளியான பின்னரே முழுமையான விவரங்கள் தெரியவரும், என்றார்.
6 சதவீதம் உயரும்: காகிதம் மீதான ஜி.எஸ்.டி வரி 12 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக உயர்த்தப்பட்டதால், காலண்டர் விலை 6 சதவிகிதம் வரை உயரும் என காலண்டர் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
2017-ம் ஆண்டு வரை வரிவிலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள் பட்டியலில் இருந்த காலண்டருக்கு, ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டபோது, 12 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டது. அதன்பின் 2022-ம் ஆண்டு காலண்டருக்கான ஜிஎஸ்டி வரி 18 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் 56-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வரி விதிப்பு 2 அடுக்குகளாக குறைக்கப்பட்டதால், காலண்டர் உற்பத்திக்கான முக்கிய மூலப் பொருளான காகிதம் 12 சதவீத அடுக்கில் இருந்து 18 சதவீத அடுக்குக்கு மாற்றப்பட்டது. இதனால் காலண்டர் விலை மேலும் 6 சதவீதம் உயரும் என உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு காலண்டர் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் ஜெய்சங்கர் கூறுகையில், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றை 5 சதவிகித அடுக்குக்குள் கொண்டு வந்திருப்பதை வரவேற்கிறோம். முக்கியமாக நோட்டுப் புத்தகங்கள், எழுது பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது கல்வி வளர்ச்சிக்கு பயனளிக்கும். காகிதம் மீதான வரி 12-ல் இருந்து 5 சதவிகிதமாக குறைக்கப் படும் என எதிர்பார்த்த நிலையில், 18 சதவிகித வரி அடுக்குக்கு மாற்றப்பட்டுள்ளதால் காலண்டர், டைரி உள்ளிட்ட பொருட்கள் விலை வழக்கத்தை விட 6 சதவிகிதம் உயரும். இதை அரசு பரிசீலிக்க வேண்டும், என்றார்.