புதுச்சேரி: முன்னாள் பெண் அமைச்சர் தன்னை தொந்தரவு செய்த அமைச்சர்களின் பெயர்களை குறிப்பிட்டு கடிதம் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் செல்வம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்த பிறகு இந்தியாவின் வளர்ச்சி விகிதம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
2014-ல் பிரதமர் தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு பல்வேறு வகையான வரிவிதிப்புகள் அதிகப்படுத்தப்பட்டன. எதிர்க்கட்சிகள் அனைத்தும் அந்த வரி விதிப்பகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து குறைகூறினர்.
அமெரிக்கா, இந்தியா மீது 50 சதவீத வரியை பல்வேறு பொருட்களுக்கு உயர்த்தினாலும் கூட, அதையெல்லாம் தாண்டி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜிஎஸ்டி வரி விதிப்பை 5 மற்றும் 18 சதவீதம் மட்டுமே இருக்கும் என்று அறிவித்துள்ளார். குறிப்பாக மருத்துவ காப்பீடுகளுக்கு முழுவதும் வரிவிதிப்பில்லை என்று கூறியுள்ளார்.
கல்வி உபகரணங்களுக்கான வரியையும் முற்றிலுமாக நீக்கியுள்ளார். இதன் மூலம் மருத்துவத்துறை, கல்வித்துறை முன்னேற்றம் அடையவும், ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் செய்துள்ளார். இதற்காக மத்திய அரசுக்கு, புதுச்சேரி அரசு சார்பில் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
வரி குறைப்பால் புதுச்சேரி மாநிலத்துக்கு ஆண்டுக்கு ரூ.126 கோடி இழப்பு ஏற்படும். முதல்வர் பல்வேறு உத்திகளை கடைபிடித்து அந்த இழப்பை சரி செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.
அமெரிக்கா விதித்த 50 சதவீத வரிவிதிப்பை தவிடுபொடியாக்கும் வகையில் இந்த வரி குறைப்பை மத்திய நிதியமைச்சர் அறிவித்துள்ளார். இது செப்டம்பர் 22-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்ற உத்தரவாதத்தையும் வழங்கியுள்ளார். இதன் மூலம் மீண்டும் இந்தியா மிகப்பெரும் வளர்ச்சியடைந்த நாடாக மாறும். நுகர்வோர் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இதனால் 11-வது இடத்தில் இருந்த இந்தியாவின் பொருளாதாரம் 5-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது” என்றார்.
அப்போது செய்தியாளர்கள் இரண்டு அமைச்சர்கள் தொந்தரவு செய்வதாக முன்னாள் பெண் அமைச்சர் கூறியிருப்பது குறித்து கேட்டபோது, அதற்கு சட்டப்பேரவைத் தலைவர், அதுசம்மந்தமாக எனக்கு எந்தவித கடிதமும் வரவில்லை. அமைச்சர்களின் பெயர்களையும் அவர் குறிப்பிடவில்லை. நானும் என்னுடைய அலுவலக தொலைபேசி எண்ணில் இருந்து 3 முறை தொடர்பு கொண்டும் அவர் எடுக்கவில்லை. எனவே என்னிடம் கடிதம் கொடுத்தால் முதல்வரிடம் கலந்துபேசி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
ரூ.669 கோடிக்கு புதுச்சேரி சட்டப்பேரவை கட்டும் திட்டம் இறுதி வடிவம் பெற்றுள்ளது. கடந்த 2-ம் தேதி தலைமை செயலரின் கையொப்பம் இடப்பட்டு மத்திய நிதியமைச்சகத்துக்கு கோப்பு சென்றுள்ளது.
அரசு செயலர் முத்தம்மா இதற்கான பூர்வாங்க நடவடிக்கையை எடுத்து வருகின்றார். விரைவில் நிதிபெறப்பட்டு டெண்டர் விடப்படும். இந்த ஆட்சியிலேயே அடிக்கல் நாட்டப்படும். மாநில அந்தஸ்து தொடர்பாக என்.ஆர்.காங்கிரஸ் உள்ளிட்ட பல எம்எல்ஏக்கள் கடிதம் கொடுத்துள்ளனர். விரைவில் சட்டப்பேரவை கூட்டப்பட்டு விவாதிக்கப்படும்.
அனைத்து கட்சி எம்எல்ஏக்களுடன் செப்டம்பர் மாதத்துக்கு பிறகு டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சரை சந்திப்பதாக முதல்வர் கூறியுள்ளார். அவர் கட்சி ஆரம்பித்த முக்கிய நோக்கமே மாநில அந்தஸ்து தான். நிச்சயம் செல்வார்.
முதல்வர் ரங்கசாமிக்கு யார் வேண்டுமானாலும் நண்பராக இருக்கலாம். நட்பு வேறு கூட்டணி வேறு. தவெக பொதுச் செயலாளர் புதுச்சேரியில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என்று தெளிவாகக் கூறியுள்ளார். ஆகவே தேசிய ஜனநாயக கூட்டணி 2026-ல் வெற்றி பெற்று முதல்வர் ரங்கசாமி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.