திருப்பூர்: ஜிஎஸ்டி வரி சீர்திருத்த நடவடிக்கை, இந்திய ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் துறையின் உலக சந்தையில் போட்டியிடும் தன்மையை மேலும் வலுப்படுத்தி, புதிய உயரங்களை எட்டுவதற்கு உதவும் என திருப்பூர் தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 56-வது கூட்டம் டெல்லியில் கடந்த 2 நாட்களாக நடந்தது. இதில் அடுத்த தலைமுறைக்கான ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் குறித்த விரிவான விவாதங்கள் நடந்தன.
கட்டமைப்பு சீர்திருத்தங்கள், வரி விகித எளிமைப்படுத்தல், வாழ்க்கை தரத்தை உயர்த்தல் ஆகிய 3 அம்சங்களை அடிப்படையாக கொண்டு ஜிஎஸ்டி மறுசீரமைப்பை ஜிஎஸ்டி கவுன்சில் மேற்கொண்டது. இதன் மூலம் கார், பைக், செல்போன், டி.வி உள்ளிட்டவை விலை குறையும் நிலையில், சிறு குறு மற்றும் நடுத்தர (எம்எஸ்எம்இ) தொழில் நிறுவனங்களுக்கான வரிச்சுமையும் கணிசமாக குறையும். இதற்கு திருப்பூர் தொழில்துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் (ஏஇபிசி) ஏ.சக்திவேல்: ஜிஎஸ்டி கவுன்சிலால் அறிவிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க சீர்திருத்த நடவடிக்கைகளை மனதார வரவேற்கிறோம். இந்த துணிச்சலான நடவடிக்கை, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிப் பாதையை வலுப்படுத்தும்.
ஏற்றுமதி பணத்தைத் திரும்பப் பெறுவதை 7 நாட்களுக்குள் விரைவுபடுத்துதல், தொழில் கொள்கையில் தற்காலிக பணத்தைத் திரும்பப் பெறுவதை நீட்டித்தல், ரூ. 1000-த்துக்கு கீழே ஜிஎஸ்டி பணத்தைத் திரும்பப்பெற அனுமதித்தல் ஆகியவை ஏற்றுமதியாளர்களுக்கு சரியான நேரத்தில் நிவாரணம் அளிக்கும்.
பணப் புழக்க கட்டுப்பாடு களைக் குறைப்பது உள்ளிட்டவை முக்கிய முயற்சிகளாக அமைகின்றன. இந்தியாவின் ஏற்றுமதியாளர்கள் மற்றும் ஜவுளி ஆடைத்துறைக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் இந்திய அரசின் தொலை நோக்கு தலைமைக்கு, குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், ஜவுளி அமைச்சர் கிரிராஜ் சிங் ஆகியோருக்கு நன்றி. இந்த முற்போக்கான வரி சீர்திருத்த நடவடிக்கைகள், இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு அதிகாரம் அளிக்கும்.
இந்திய ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் துறையில், உலக சந்தையில் போட்டியிடும் தன்மையை மேலும் வலுப்படுத்தி, புதிய உயரங்களை எட்டுவதற்கு உதவும். ‘மேக் இன் இந்தியா’ என்ற தேசிய தொலைநோக்கு பார்வையை பலப்படுத்த உதவும்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் கே.எம்.சுப்பிர மணியன்: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கை, ஜவுளித்துறைக்கு சாதகமாக உள்ளது. முழுவதுமாக சமநிலைப்படுத்தப்பட்டு, கணினி மயமாக்கப்பட இருப்பதால் உற்பத்தியாளர்களுக்கான ரீபண்ட் எளிதில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
12 சதவீதத்தில் இருந்த பெரும்பாலான பொருட்கள் 5 சதவீதத்துக்கு கீழ் ஒரே படி நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. வாங்குவதற்கும், விற்பனைக்கும் உள்ள ஜிஎஸ்டி வரி வித்தியாசம் சமநிலைப்படுத்தப்பட்டு இருப்பதன் மூலம் உற்பத்திதுறையினர் உற்பத்தி செய்து அதனை விற்பனை செய்வதில் இருந்த வேறுபாடு களையப்பட்டு கூடுதல் சுமை தவிர்க்கப்பட்டுள்ளது.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் நீண்ட நாள் கோரிக்கையான, மனிதர்களால் உருவாக்கப்படும் செயற்கை நூலிழை எனப்படும் பாலியஸ்டர் நூல் வகைகளுக்கு 5 சதவீதமாக ஜிஎஸ்டி குறைக்கப்பட்டு இருப்பதன் மூலம், இந்தியா போட்டி நாடுகளுடன் போட்டியிட்டு சந்தைகளை கைப்பற்றுவதற்கு பயனுள்ளதாக இருக்கும்.
தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கம் (சைமா) வைகிங் ஈஸ்வரன்: டெக்ஸ்டைல் ஜவுளி சம்பந்தமான அனைத்து வரிகளிலும் ஜிஎஸ்டி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தொழில் வளம் சிறக்க இந்த மாற்றம் டெக்ஸ்டைல் மற்றும் ஜவுளித்துறைக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது. இந்த ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் தற்போதுள்ள சிறு, குறு ஆடை உற்பத்தியாளர்களுக்கு தங்கள் தொழில் செயல்பாட்டு மூலதனம் நிதி மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. ஜிஎஸ்டி வரி சீரமைப்பு செய்த மத்திய அரசுக்கு நன்றி.