அயோத்தி: பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே தனது மனைவி ஓம் தாஷி தோமாவுடன் அயோத்தி ராமர் கோயிலில் வழிபாடு மேற்கொண்டார்.
அயோத்தி விமான நிலையத்துக்கு இன்று அதிகாலை வருகை தந்த பூட்டான் பிரதமர் மற்றும் அவரது மனைவியை, உத்தரப் பிரதேச அமைச்சர் சூர்ய பிரதாப் ஷாஹி மாநில அரசு சார்பில் விமான நிலையத்தில் வரவேற்றார். இதைத் தொடர்ந்து பூட்டான் பிரதமரும் அவரது மனைவியும் அயோத்தி ராமர் கோயிலுக்குச் சென்றனர்.
ராமர் கோயிலில் வழிபாடு மேற்கொண்ட ஷெரிங் டோப்கே, ஓம் தாஷி தோமா ஆகியோர் பின்னர் கோயில் வளாகத்தை ஆய்வு செய்தனர். பூட்டான் பிரதமரின் இந்திய வருகையின் ஒரு பகுதியாக அவரது அயோத்தி வருகை அமைந்தது. இந்தியாவுக்கும் பூட்டானுக்கும் இடையே இருக்கும் நெருக்கமான ஆன்மிக, கலாச்சார உறவுகளை பிரதிபலிக்கும் வகையில் பூட்டான் பிரதமரின் அயோத்தி வருகை அமைந்திருந்தது.
முன்னதாக, பிஹாரின் நாஜர்கிரில் கட்டப்பட்ட கோயிலுக்கு ஷெரிங் டோப்கேவும், ஓம் தாஷி தோமாவும் வருகை தந்தனர். அப்போது, நாளந்தா பல்கலைக்கழக யூடியூப் சேனலுக்காக உரையாற்றிய ஷெரிங் டோப்கே, “பிஹாரின் பண்டைய கல்வி மையமான நாளந்தா தற்போது புத்துயிர் பெற்று வருகிறது. நாளந்தா பாரம்பரியத்தையும் உணர்வையும் தொடர்வதற்காகவும் பரப்புவதற்காகவும் இந்திய அரசுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இதே உணர்வில் ராஜ்கிரில் ஒரு கோயில் கட்ட பூட்டானுக்கு வாய்ப்பளித்ததற்கு நன்றி.
இன்று, நாளந்தா பல்கலைக்கழகம் நாளந்தா உணர்வை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிறது. நாளந்தா உணர்வு வளர வேண்டும். இதற்கு பூட்டானின் பங்களிப்பை நாங்கள் செய்வோம். அமைதி, ஒற்றுமை மற்றும் ஆன்மிகத்தின் காலத்தால் அழியாத கலங்கரை விளக்கமாக நாளந்தா திகழ்கிறது. பூட்டானின் ஆன்மிக, கலாச்சார மரபுகளை வடிவமைப்பதில் நாளந்தாவுக்கு ஆழமான பங்களிப்பு உண்டு. அதை பூட்டான் போற்றுகிறது.” என தெரிவித்தார்.