ஆண்டிபட்டி: அதிமுக ஆட்சி தொடர்ந்திருந்தால் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்த்தப்பட்டு 5 மாவட்ட விவசாயிகளின் எதிர்பார்ப்பும், கனவும் நிறைவேறி இருக்கும் என்று ஆண்டிபட்டியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
”மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்பதை வலியுறுத்தி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மாநிலம் முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் நேற்று இரவு (செப்.4) பிரச்சாரம் செய்து அவர் பேசியதாவது: ”இங்கு கூடியுள்ள தொண்டர்கள் கூட்டம் வரும் தேர்தலில் அதிமுக வெற்றியை உறுதிப்படுத்தி உள்ளது. ஆண்டிபட்டி தொகுதிக்கு என்று தனி வரலாறு இருக்கிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா என்று அரசியல் வரலாற்றிலேயே இரண்டு முதல்வர்களை தந்த தொகுதி இது.
ஆண்டிபட்டி அதிமுகவின் எஃகு கோட்டை. எத்தனை கட்சிகளுடன் திமுக கூட்டணி வைத்தாலும் வரும் தேர்தலில் வெற்றி பெற முடியாது. திமுக ஆட்சிக்கு வந்து 51 மாதம் முடிந்து விட்டது. இந்த ஆட்சியில் ஆண்டிபட்டி தொகுதிக்கு எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை.
5 மாவட்டங்களின் நீராதாரமாக முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றம் வரை சென்று சட்டப் போராட்டம் நடத்தினார். இதனடிப்படையில் அணையை பலப்படுத்திவிட்டு 142 அடி உயர்த்திக் கொள்ளலாம் என்ற தீர்ப்பு கிடைத்தது.
நான் முதல்வராக இருந்தது போது பேபி அணையைப் பலப்படுத்த ரூ.8 கோடி ஒதுக்கப்பட்டு முதற்கட்டப் பணிகள் தொடங்கின. கேரள முதல்வரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினேன். அதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது. ஆட்சி தொடர்ந்திருந்தால் நீர்மட்டம் உயர்த்தப்பட்டு 5 மாவட்ட விவசாயிகளின் எதிர்பார்ப்பும், கனவும் நிறைவேறி இருக்கும்.
ஆனால் ஆட்சிக்கு வந்த திமுக நீர்மட்டத்தை உயர்த்த எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இந்தியா கூட்டணியில் தானே கம்யூனிஸ்ட் கட்சியும் திமுகவும் உள்ளது. ஏன் இது குறித்து திமுக, கேரள அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அவர் நினைத்தால் கேரள அரசுடன் பேசி எளிதில் தீர்வு கண்டிருக்கலாம். ஆனால் ஸ்டாலின் தனது குடும்பம், அதிகாரம் ஆகியவற்றுக்காகவே கூட்டணியில் இருந்து வருகிறார். அதனால் பெரியாறு அணை விஷயத்தில் அவர் அக்கறை காட்டுவதில்லை.
அதிமுக ஆட்சியில் விவசாயிகளின் பங்கேற்புடன் குடிமராமத்துப் பணி, மும்முனை மின்சாரம், சொட்டு நீர் மானியம், இலவச ஆடு, மாடு, கோழி, மடிக் கணினி என்று ஏராளமான திட்டங்களை செயல்படுத்தினோம்.
அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் தொழில் வளம் பெருக நடவடிக்கை எடுக்கப்படும். இளைஞர்களுக்கு அதிகளவில் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். தமிழகம் முழுவதும் 4 ஆயிரம் மினி கிளினிக்குகள் திறக்கப்படும்.
திமுக ஆட்சியில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்து விட்டது. ஆரம்பத்திலேயே இதை சட்டமன்றத்தில் கூறினேன். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தமிழக இளைஞர்கள் கஞ்சாவுக்கு அடிமையாகி சமுதாயத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. சிறுமி முதல் மூதாட்டி வரை பாதுகாப்பு இல்லாமல் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. காவல்துறைகளின் கைகள் கட்டப்பட்டுள்ளன.
நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் இந்நிலை அனைத்தும் மாறும். பெட்ரோல் விலை குறையவில்லை. மாதம் ஒரு முறை மின் அளவீடு, கல்விக் கடன் ரத்து உள்ளிட்ட பல வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஆனால் 98 சதவீதம் தேர்தல் வாகுறுதிகளை நிறைவேற்றியதாக பொய் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
ஆண்டிபட்டி ஒன்றியப் பகுதிகளுக்கு முல்லை பெரியாற்றில் இருந்து நீர் கொண்டு வரப்படும். வைகை அணை தூர்வாரப்பட்டு நீரை அதிகளவில் தேக்க நடவடிக்கை எடுக்கப்படும். நெசவாளர்களுக்கு இலவச வீடு உள்ளட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படும். என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இந்நிகழ்வில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தேனி கிழக்கு மாவட்டச் செயலாளர் முருக்கோடை ராமர், கிழக்கு, மேற்கு ஒன்றியச் செயலாளர்கள் வரத ராஜன், லோகிராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.