பழைய ஜிஎஸ்டி வரி விகிதத்தில் சிமென்டுக்கு 28 சதவீத வரி விதிக்கப்பட்டது. மாற்றியமைக்கப்பட்ட புதிய வரி விகிதத்தில் சிமென்ட் மீதான ஜிஎஸ்டி வரி 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டு இருக்கிறது.
இதேபோல பழைய வரி விகிதத்தில் மரங்கள், மார்பிள், கிரானைட் மற்றும் கட்டுமான பொருட்களுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வந்தது. புதிய வரி விகிதத்தில் இவை 5 சதவீத வரி வரம்பின் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளன. சிமென்ட் மற்றும் கட்டுமான பொருட்கள் மீதான வரி குறைக்கப்பட்டு இருப்பதால் வீடுகளின் விலை கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
40 சதவீத வரி விதிக்கப்பட்டாலும் சொகுசு கார் விலையும் குறையும்: ஜிஎஸ்டி வரி விகிதத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. இதன்படி சொகுசு கார்களுக்கு 40 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் சொகுசு கார்களின் விலை உயரும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த கருத்தை ஆட்டோ மொபைல் துறை நிபுணர்கள் மறுத்து உள்ளனர். அவர்கள் கூறியிருப்பதாவது: பழைய ஜிஎஸ்டி வரி விகிதத்தில் மெர்சிடஸ் உள்ளிட்ட சொகுசு கார்களுக்கு 28 சதவீத வரி விதிக்கப்பட்டது. அதோடு 22 சதவீத செஸ் வரியும் விதிக்கப்பட்டது.
ஒட்டுமொத்தமாக சொகுசு கார்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்பட்டது.அதாவது ஒரு மெர்சிடஸ் காரின் விலை ரூ.1 கோடி என்றால், ரூ.50 லட்சம் வரி செலுத்த வேண்டும். தற்போது சொகுசு கார்களுக்கு 40 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் செஸ் வரி நீக்கப்பட்டு உள்ளது.
பழைய வரி விகிதத்தில் 50 சதவீதம் வரி விதிக்கப்பட்ட நிலையில் தற்போது 40 சதவீதம் மட்டுமே வரி செலுத்த வேண்டும். அதாவது ஒரு மெர்சிடஸ் காரின் விலை ரூ.1 கோடி என்றால், ரூ.40 லட்சம் மட்டும் வரி செலுத்தினால் போதும். எனவே புதிய ஜிஎஸ்டி வரி விகிதத்தில் 40 சதவீத வரி விதிக்கப்பட்டு இருந்தாலும் சொகுசு கார்களின் விலை குறையும். இவ்வாறு ஆட்டோ மொபைல் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.