சென்னை: தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் செப்.8-ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பாக சென்னை மண்டல வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு, வடமேற்காக நகர்ந்து நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுகுறைந்து, வடக்கு சட்டீஸ்கர் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவியது.
இதற்கிடையே, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் செப்.7-ம் தேதி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 8-ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் வரை இயல்பைவிட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலை 27 டிகிரி முதல் 35 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும்.
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பார்வூட், விண்ட்வொர்த் எஸ்டேட், மதுரை மாவட்டம் தனியாமங்கலத்தில் அதிகபட்சமாக 3 செ.மீ. மழை பதிவானது. மதுரை விமான நிலையத்தில் 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

