புதுடெல்லி: எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் உட்பட அனைத்து மாநிலங்களின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் ஜிஎஸ்டி குறைப்பு நடைபெற்றுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி விகித மாற்றம் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: ஜிஎஸ்டி அமல்படுத்திய 8 ஆண்டுகளுக்குப் பிறகு மிகப்பெரிய சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி குறைப்பு ஒருமித்த கருத்தின் அடிப்படையில் கொண்டு வரப்பட்டுள்ளது. சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி அறிவித்தபடி இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.
இதற்கு மேற்கு வங்கம், கேரளா, பஞ்சாப் உட்பட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களும் ஒப்புதல் அளித்தன. இதில் எந்த எதிர்ப்பும் எழவில்லை. பிரதமர் மோடியின் எண்ணம் மிகவும் எளிமையானது. நடுத்தர குடும்பங்களுக்கு மிகப் பெரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றுதான் அவர் விரும்புகிறார்.
அதேநேரத்தில் கூட்டாட்சி கட்டமைப்பை வலுப்படுத்த, வருவாய் இழப்பு குறித்த மாநிலங்களின் கவலைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும். ஆனால், ஜிஎஸ்டி வசூல் என்பது மத்திய, மாநில அரசுகளை சார்ந்தது. இதில் மாநில அரசு பாதிக்கப்படுகிறது என்றால், மத்திய அரசும் பாதிக்கப்படுகிறது என்பது உண்மை. ஆனால், சாதாரண மக்கள் பயன்பட வேண்டும், அவர்களுக்கு நிவாரணம் கிடைக்க வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் நோக்கம். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.
நுகர்வோருக்கு பலன் சேர வேண்டும்: ஜிஎஸ்டி வரி குறைப்பின் பயன்கள் ஒவ்வொரு நுகர்வோரையும் சென்றடையும் வகையில் தொழில்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “தொழில்துறையினர் பிரதமர் மோடிக்கு இரண்டு உறுதிமொழிகளை அளிக்க வேண்டும்.
முதலாவதாக, ஜிஎஸ்டி குறைப்பிலிருந்து சேமிக்கப்படும் ஒவ்வொரு ரூபாயையும் நுகர்வோருக்கு வழங்குவதற்கு தொழில்துறையினர் உறுதியேற்க வேண்டும். இரண்டாவது, நாட்டு மக்களிடம் இந்திய தயாரிப்புகளை தீவிரமாக கொண்டு சேர்த்து அவற்றின் விற்பனையை ஊக்குவிக்க உதவ வேண்டும். இவை இரண்டையும் நிறைவேற்ற பிரதமருக்கு தொழில்துறை நிறுவனங்கள் உறுதியளிக்க வேண்டும்” என்றார்.
மீன் வியாபாரத்தில் போட்டியை ஏற்படுத்தும்: ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்து மீன்வளத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மீன் உற்பத்தியில் இந்தியா உலகளவில் இரண்டாவது பெரிய நாடாக உள்ளது. இங்கு ஆண்டுக்கு 95 லட்சம் டன்கள் மீன் பிடிக்கப்படுகிறது. கடல் உணவு ஏற்றுமதி கடந்த நிதியாண்டில் ரூ.60,000 கோடியை கடந்தது. மீன்வளத்துறை தற்போது 3 கோடிக்கும் மேற்பட்ட மக்களின் வாழ்வாதாரத்துக்கு உதவுகிறது.
மீன் எண்ணெய், பதப்படுத்தப்பட்ட மீன் வகைகளுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. டீசல் இயந்திரங்கள், பம்புகள், வலைகள் மற்றும் மீன் பிடித் தொழில் மற்றும் மீன் வளர்ப்பு பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியும் 5 சதவீதமாக குறைந்துள்ளதால், மீனவர்கள் மீன் பிடிப்பதற்கான செலவு குறையும். இதனால் போட்டி ஏற்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.