புதுடெல்லி: ஜிஎஸ்டி 2.0 வரிவிதிப்பை அமல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
மென்பொருள் மாற்றத்தை விரைந்து முடிக்க தொழில் துறையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிய ஜிஎஸ்டி வரி முறையை சுமுகமாக அமல்படுத்த தேவையான மென்பொருள் மேம்பாட்டுக்கு, தொழில் துறையினருடன் ஜிஎஸ்டி துறை ஒருங்கிணைந்து செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத் (சிபிஐசி) தலைவர் சஞ்சய் குமார் அகர்வால் கூறியதாவது: பொதுமக்களின் நலன்கருதியும், பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை ஏற்றும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் தற்போது மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய ஜிஎஸ்டி 2.0 வரி விதிப்பு முறை வரும் 22-ம் தேதி முதல் அமலாகிறது.
அனைத்து பொருட்களுக்கும் 5 சதவீதம் மற்றும் 18 சதவீதம் என்ற இரண்டு வரி விதிப்புகள் மட்டுமே விதிக்கப்படும். புகையிலை பொருட்கள் மற்றும் ஆடம்பர பொருட்களுக்கு மட்டும் 40 சதவீத வரி விதிக்கப்படும். இந்த புதிய வரி விதிப்பை அமல்படுத்த நாங்கள் தயார் நிலையில் உள்ளோம்.
தொழில் துறையினர் தாங்கள் பயன்படுத்தும் மென்பொருட்களை மேம்படுத்துவது தொடர்பாக, ஜிஎஸ்டி துறை ஒருங்கிணைந்து செயல்படும். இது தொடர்பாக தொழில்துறையினரை நாங்கள் ஏற்கெனவே தொடர்பு கொண்டுள்ளோம். தொழில் துறையினர் தேவையான மாற்றங்களை செய்து கொள்ளலாம். புதிய வரி விதிப்பு முறை எந்த தடைகளுமின்றி சுமுகமாக அமலாகும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
உள்ளீட்டு வரிகளைப் (ஐடிசி) பெறுவதில் தொழில்துறையினருக்கு எந்த சிக்கலும் ஏற்படாது. ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்யும்போது, ஐடிசியை முழுவதுமாக பெற்றுக் கொள்ளலாம். தொழில் துறையினரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற தயாராக இருக்கிறோம். இவ்வாறு சஞ்சய் குமார் அகர்வால் கூறினார்.