மேட்டூர்: “நீங்கள் (பாமகவினர்) எதிர்பார்க்கும் கூட்டணியை விரைவில் அறிவிப்பேன்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மேட்டூர் அடுத்த மேச்சேரிக்கு, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமது கட்சி நிர்வாகிகளின் இல்லத் திருமண விழா உள்ளிட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இன்று வந்தார். முன்னதாக, சேலம் மாவட்ட எல்லையான மேச்சேரி – தொப்பூர் பிரிவு சாலையில் அவருக்கு கட்சி சார்பில் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், அப்பகுதியில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியது: “தமிழக மக்களை சந்தித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களின் உரிமைகளை எடுத்துரைத்து, மக்கள் இயக்கமாக நடைபயணத்தை மேற்கொண்டு வருகின்றேன். நடைபயணத்தின் மைய நோக்கம் விவசாயிகளின் விரோதி, பெண்களின் விரோதி, ஊழல் ஆட்சி, திமுக ஆட்சியை அகற்ற வேண்டுமென்ற ஒரே நோக்கத்திற்காக நடைபயணத்தை மேற்கொண்டுள்ளேன்.
கடந்த நான்கரை ஆண்டு காலமாக தமிழகத்தில் மோசமான, பெண்களுக்கு எதிரான, பாதுகாப்பு இல்லாத ஆட்சி என தான் இருக்கிறது. வளர்ச்சி என்பது இந்த ஆட்சியில் இல்லை. படித்த ஒன்றறை கோடி இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கின்றனர். ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ள நம் முதல்வர், முதலீடு பெறுவதற்காக சென்றிருப்பதாக சொல்கிறார். ரூ. 3 000 கோடி முதலீடு பெற்ற 3 கம்பெனியும் சென்னையில் இருக்கிற கம்பெனிதான். இதற்கு எதற்காக ஜெர்மனியில் போய் கையெழுத்து போடணும் ?
திமுக அளித்த 505 தேர்தல் வாக்குறுதிகளில் 66 தான் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் வெறும் 13 சதவீதம் வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றப் பட்டுள்ளது. 35 தான் பாஸ் மார்க், திமுக 16 மார்க் வாங்கி ஃபெயிலாகிவிட்டது. ஃபெயிலானவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது. ஆட்சிக்கு வருவதற்கான திறமை, பக்குவம் கிடையாது.
உலகிலேயே கொடூரான ஹிட்லர் கூட விவசாயிகளை கொடுமைப்படுத்தவில்லை. ஆனால், இந்த ஆட்சி விவசாயிகளை குண்டர் சட்டத்தில் போடுகிற ஆட்சி. நீங்க எதிர்பார்க்கிற கூட்டணி விரைவில் அறிவிக்கப்படும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதுதான் சமூக நீதிக்கான சிறந்த வழி என்பதை புரிந்துகொள்ள வேண்டும்” என்று அவர் பேசினார்.
பட்டாசு வெடித்ததில் தொண்டர் காயம்: மேச்சேரியை அடுத்த தொப்பூர் பிரிவு சாலையில், பாமக சார்பில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு மாலை அணிவித்து, பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, பட்டாசு பொறி ஒன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சேட்டு (40) என்பவரின் வலது கையில் பட்டதில் காயமடைந்தார். உடனடியாக, அவரை ஆம்புலன்ஸ் மூலமாக சிகிச்சைக் காக தொப்பூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.