சென்னை: ஜிஎஸ்டி கவுன்சிலின் வரலாற்று சிறப்புமிக்க முடிவுகளை அதிமுக வரவேற்கிறது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முன்னதாக நேற்று (புதன்கிழமை) மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சிலின் 56-வது கூட்டம் டெல்லியில் தொடங்கியது. இதில் ஜிஎஸ்டி மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை வெளியிட்ட நிர்மலா சீதாராமன், வரும் 22-ம் தேதி முதல் 5% மற்றும் 18% என இரண்டு அடுக்குகளின் கீழ் மட்டுமே ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும் என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, “ஜிஎஸ்டி கவுன்சிலின் வரலாற்று சிறப்புமிக்க முடிவுகளை அதிமுக வரவேற்கிறது. பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது பாராட்டுகளை உரித்தாக்குகிறேன். அவரின் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமைத்துவம் பல்வேறு சீர்திருத்தங்களுக்கு வித்திட்டுள்ளது. அதேபோல் எளிமையாக்கப்பட்ட, வளர்ச்சிக்கு வித்திடக்கூடிய ஜிஎஸ்டி கட்டமைப்பை வெளியிடுவதில் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அத்தியாவசியப் பொருட்கள், சுகாதார சேவைகள், வேளாண் உள்ளீடுகள், காப்பீட்டு சேவைகள் மீது இனி 5% மற்றும் 18% என இரண்டு அடுக்குகளின் கீழ் மட்டுமே ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும் என்பதால் இது எளிமை, நியாயம் மற்றும் வளர்ச்சியை உறுதி செய்யும். ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள், வரி இணக்கத்தை எளிதாக்கும், நுகர்வோர் நம்பிக்கையை அதிகரிக்கும் மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும” என்று இபிஎஸ் தெரிவித்துள்ளார்.