தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றுதான் இந்தோனேசியா. உலகின் 3-வது பெரிய ஜனநாயக நாடு என்ற அடையாளம் கொண்டது. பூகோள ரீதியாக நிலநடுக்கங்கள், சுனாமி போன்ற இயற்கைப் பேரிடர்கள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதி. பசிஃபிக் ரிங் ஆஃப் ஃபயர் எனப்படும் பூகம்ப பாதிப்புப் பகுதியில் அமைந்திருப்பதால், அந்த நாட்டுக்கு நிலநடுக்க அச்சுறுத்தல் அதிகமாக உள்ளது. 2004 டிசம்பரில் இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம்தான் ஆசிய நாடுகள் பலவற்றில் சுனாமி பாதிப்பை ஏற்படுத்தியது என்பதை மறந்திருக்க முடியாது.
இயற்கைச் சீற்றங்கள் வெகுவாகவே இருந்தாலும் கூட சுற்றுலாவுக்கு பெயர் பெற்ற பாலி உள்ளிட்ட பல்வேறு குட்டித் தீவுகளைக் கொண்ட தீவு தேசம் இப்போது போராட்டத் தீ பற்றி எரியும் தேசமாக உள்ளது. கடந்த சில நாட்களாக அரசுக்கு எதிரான மக்கள் போராட்டத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்தப் போராட்டம் குறித்தும், அதன் பின்னணி குறித்தும் சற்று விரிவாகப் பார்ப்போம்.
இந்தோனேசியாவில் சமீப காலமாக பொருளாதார மந்தநிலை நிலவுகிறது. அந்த நாட்டு மக்களின் சராசரி வருமானம் என்பது இந்திய ரூபாய் மதிப்பில் கணக்கிட்டால் வெறும் ரூ.17 ஆயிரமாக உள்ளது. ஆனால், அங்கு எம்.பி.க்களுக்கு சுமார் ரூ.5 லட்சம் (இந்திய மதிப்பில்) வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இதனை எதிர்த்து மக்கள் போராட்டம் வெடித்தது. கடந்த வாரம் இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் இந்தப் போராட்டம் தொடங்கியது. இந்தோனேசிய நாடாளுமன்றத்த முற்றுகையிட்ட பொது மக்கள், எம்.பி.க்கள் சம்பளத்தைக் குறைக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.
போராட்டம் வலுக்கவே, அங்கே ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். போராட்டக் களத்தில் போலீஸுக்கும், பொது மக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது களத்தில் இருந்த போலீஸ் வாகனம் ஒன்று தறிகெட்டோட, அது அங்கிருந்து உணவு டெலிவரி ஊழியர் ஒருவரின் உயிரைப் பறித்தது. இதனால் போராட்டக்காரர்கள் மேலும் ஆத்திரமடைந்தனர். மோதல் தீவிரமாக தடியடி, கண்ணீர் புகைக் குண்டு வீச்சு, ரப்பர் புல்லட்கள் மூலம் துப்பாக்கிச் சூடு என்று கலவர பூமியாக அப்பகுதி மாறியது. போராட்டக்காரர்கள் மீது போலீஸ் தடியடி நடத்திய தகவல் பரவ, இப்போது போராட்டம் படிப்படியாக நாடு முழுவதும் பரவி விட்டது.
இந்த நிலையில், இந்தோனேசியாவில் இன்று பெண்களும் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர். பிங்க் நிற உடையில் திரண்ட ஆயிரக்கணக்கான பெண்கள், கைகளில் துடைப்பதுடன் வந்திருந்தனர். ஒரு கையில் துடைப்பன், மறு கையில், “எம்.பி.க்கள் சம்பளம் குறைக்கப்பட வேண்டும்“, “காவல் துறை சீர்திருத்தம் தேவை”, ”அரசாங்கத்தின் போலி இனிப்பான வாக்குறுதிகளால் சர்க்கரை நோய்தான் வருகிறது” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர். அரசு நிர்வாகத்தில் அழுக்கு சேர்ந்துவிட்டது. அதை துப்புரவு செய்யவே இந்த துடைப்பம் என்று கோஷமிட்டனர்.
பெண்கள் மட்டுமல்லாது இந்தப் போராட்டத்தில் மாணவர்கள், தொழிலாளர்கள், சமூக நல செயற்பாட்டாளர்கள் என்று பல தரப்பினரும் கலந்து கொண்டுள்ளனர். போராட்டக் களத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
என்ன சொல்கிறது அரசு? – எம்.பி.க்கள் சம்பளத்துக்கு எதிராக போராட்டம் நாளுக்கு நாள் வேகமெடுக்கும் சூழலில், அரசாங்கமோ இதன் பின்னணியில் சதி இருக்கிறது என்கிறது. இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுமியாண்டோ கூறுகையில், “இந்தப் போராட்டம் தீவிரவாதம் மற்றும் துரோகத்தின் அடையாளம். காவல் துறையும், ராணுவமும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வன்முறைக் கும்பலுக்கு எதிராக வலுவாக செயல்படும்” என்று கூறினார்.
அதிபர் பிரபோவோ இப்போது சீனாவில் இருக்கிறார். இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானுக்கு எதிரான போரில் சீனா வெற்றி பெற்றதன் 80-ம் ஆண்டு வெற்றி விழா தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள தியானன்மென் சதுக்கத்தில் இன்று கொண்டாடப்பட்டது. மிகப் பிரம்மாண்டமான முறையில் நடத்தப்பட்ட இந்த வெற்றி விழாவில், அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று இந்தோனேசிய அதிபரும் அங்கு சென்றிருக்கிறார்.
மக்கள் போராட்டத்தை ஒட்டி முதலில் அவரது பயணம் ரத்தாவதாக கூறப்பட்டது. ஆனால், பின்னர் அதிபர் திட்டமிட்டபடி பயணம் செய்தார். இது போராட்டக்காரர்கள் இன்னமும் வெகுண்டெழச் செய்துள்ளது. நாடு பற்றி எரியும்போது அதிபர் கொண்டாட்டத்துக்கு சென்றுள்ளார் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஏற்கெனவே எம்.பி.க்கள் ஊதியத்தை குறைக்கச் சொன்ன போராட்டக்காரர்கள் இப்போது களத்தில் போலீஸ் வன்முறையில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கேட்டும் போராடத் தொடங்கியுள்ளனர். இதன் நிமித்தமாக நாடாளுமன்றத்தில் 3 துணை சபாநாயகர்கள் 10-க்கும் மேற்பட்ட மாணவர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்கள் சங்கத்தினர், போராட்டக் களத்தில் கைதானவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று கோருகின்றனர்.
போராட்டம் பற்றி இந்தோனேசிய பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் ஒருவர் கூறுகையில், “ஒவ்வொரு தேர்தலுக்கு முன்னர் பல வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றன. வெற்றிக்குப் பின்னர் அவை முழுமையாக மறக்கப்படுகின்றன” என்றார்.
சபாநாயகரின் வாக்குறுதி: போராட்டம் நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டிருக்க, நாடாளுமன்ற துணை சபாநாயகர் சூஃப்மி டாஸ்கோ அகமது கூறுகையில், “நாடாளுமன்றம் அதன் உறுப்பினர்களின் சம்பளம், சலுகைகள் குறித்து ஆய்வு செய்யும். வெளிநாட்டுப் பயணங்கள் கட்டுப்படுத்தப்படும், அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மேம்படுத்தப்படும்.” என்று தெரிவித்தார். மேலும், மாணவர்கள் தங்களின் குறைகளை அரசாங்கத்திடம் நேரடியாக முன்வைக்க நாளை (வியாழக்கிழமை) வாய்ப்பளிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.
இதற்கிடையில் ஃபிட்ச் ரேட்டிங்க்ஸ் என்ற நிதிச் சேவை நிறுவனமானது, இந்தோனேசியாவில் தற்போது நடைபெறும் அரசுக்கு எதிரான போராட்டமானது அரசாங்கத்தின் இறையாண்மை மீது எதிர்மறை பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளது. மேலும், இந்தப் போராட்டத்தால் ஆளும் கூட்டணி ஆட்சிக்கு பாதிப்பு ஏற்படும், அதிபருக்கு அரசியல் ரீதியாக மிகப் பெரிய சவால் உருவாகும் என்றும் கணித்துள்ளது.