2024 மக்களவைத் தேர்தலில் மதுரை தொகுதியில் சுமார் 16 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்று அதிமுக-வை மூன்றாமிடத்துக்கு தள்ளி இரண்டாமிடம் பிடித்து அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்தது பாஜக. சட்டமன்றத் தொகுதிகள் வாரியான வாக்கு வித்தியாசத்திலும் ஆறுக்கு மூன்று தொகுதிகளில் அதிமுக-வை பின்னுக்குத் தள்ளியது பாஜக. அந்தத் தெம்பில் இப்போது மதுரையை வைத்து பல கணக்குகளைப் போடுகிறது பாஜக.
மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் 5 தொகுதிகளை திமுக கூட்டணியும் ஐந்து தொகுதிகளை அதிமுக-வும் தற்போது கைவசம் வைத்துள்ளன. கடந்த முறை பாஜக-வுடன் கூட்டணியில் இருந்தும் ஐந்து தொகுதிகளை மட்டுமே அதிமுக-வால் வெல்ல முடிந்தது. அதுவும் நகர்ப்புறத்தில் ஒரு தொகுதியில் மட்டுமே அந்தக் கட்சிக்கு வெற்றி கிட்டியது.
இம்முறை மொத்தமாக 10 தொகுதிகளையும் அள்ளவேண்டும் என இரண்டு முக்கிய கூட்டணிகளுமே முனைப்புக் காட்டுகின்றன. இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் தனித்து நின்று தாங்கள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் மதுரை தெற்கு தொகுதியை தங்களுக்காக கேட்டுப் பெற மெனக்கிட்டு வரும் பாஜக, இலவச இணைப்பாக புறநகரில் மேலூர் தொகுதிக்கும் அடிபோடுகிறது.
மதுரை தெற்கில் கணிசமான இருக்கும் சவுராஷ்ட்ரா சமூகத்து மக்களில் பெரும்பகுதியினர் பாஜக ஆதரவு மனநிலையில் இருப்பவர்கள் என்பதே அந்தக் கட்சி இந்தத் தொகுதியை குறிவைக்க முக்கிய காரணம். மக்களவைத் தேர்தலில் பாஜக இரண்டாமிடம் பிடித்த தொகுதிகளில் மதுரை தெற்கும் ஒன்று. அதனால், மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம.ஸ்ரீநிவாசனையே தெற்குத் தொகுதிக்காக தயார்படுத்துகிறது பாஜக.
முன்னதாகவே தலைமையின் கண்ணசைவு கிடைத்திருக்குமோ என்னவோ… ராம.ஸ்ரீநிவாசனும் தெற்கு தொகுதியை சுற்றிச் சுற்றி வர ஆரம்பித்திருக்கிறார். கட்சி நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகள் என நிவாசனை மதுரை தெற்கு தொகுதிக்குள் இப்போது அடிக்கடி பார்க்க முடிகிறது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய மதுரை பாஜக-வினர், “மதுரை மாவட்டத்தில் எங்களுக்கு சாதகமான தொகுதிகளில் முதன்மையானது மதுரை தெற்கு.
அதனால் அந்தத் தொகுதியை மையப்படுத்தி தேர்தல் வேலைகளை துரிதப்படுத்தி வருகிறோம். விநாயகர் சதுர்த்திக்காக தெற்கு தொகுதிக்குள் மட்டும் 50 இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்தோம். அந்த 50 இடங்களுக்கும் ராம.ஸ்ரீநிவாசன் போய் வந்தார். செப்டம்பர் 3-ம் தேதி அவருக்கு பிறந்த நாள் வருகிறது. இம்முறை தனது பிறந்த நாளை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட மஹால் ஒன்றில் நடத்த திட்டமிடுகிறார். அதில் பாஜக மாநில துணைத் தலைவர் குஷ்பு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.
மக்களவைத் தேர்தலில் மதுரை தெற்கு தொகுதியில் எங்களுக்கும் மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு வெறும் 2,263 ஓட்டுகள் தான் வித்தியாசம். இத்தொகுதிக்கு உட்பட்ட 22 வார்டுகளில் நாங்கள் 8 வார்டுகளில் முதலிடம் பிடித்தோம். இதெல்லாமே அதிமுக எங்களோடு இல்லாத நிலையிலும் நாங்கள் சாதித்தது. இப்போது அந்தக் கட்சியும் எங்களோடு இருப்பதால் இன்னும் கூடுதல் பலம். மக்களின் அபிமானத்தைப் பெறுவதற்காக தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பள்ளிக்கூடங்களுக்கு நிதியளித்தல் உள்ளிட்ட உதவிகளைச் செய்து வருகிறோம்.
இப்போது தெற்கு தொகுதி எம்எல்ஏ-வாக இருக்கும் மதிமுக-வைச் சேர்ந்த புதூர் பூமிநாதன் இம்முறை வடக்கு தொகுதிக்கு மாறலாம் என்கிறார்கள். இந்தத் தேர்தலில் பூமிநாதன் மீண்டும் இங்கு போட்டியிட்டாலும் அல்லது அவருக்குப் பதிலாக திமுக-வே நேரடியாக களமிறங்கினாலும் ராம.ஸ்ரீநிவாசனை அத்தனை எளிதில் வீழ்த்த முடியாது. ஏனென்றால் மக்களவைத் தேர்தலில் தனது தனிப்பட்ட செல்வாக்கில் அவர் வாங்கிக் காட்டிய வாக்கு சதவீதம் அப்படி” என்றனர்.
மதுரை தெற்கில் இந்த முறை நீங்கள் தானா என ராம.ஸ்ரீநிவாசனிடம் கேட்டதற்கு, “கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக மதுரையில் தீவிரமாக கட்சிப் பணியாற்றுகிறேன். எல்லோருக்கும் தெரிந்த முகமாக இருப்பதாலேயே மக்களவைத் தேர்தலில் இரண்டாமிடத்தைப் பிடிக்க முடிந்தது. பாஜக-வின் சோஷியல் இன்ஜினியரிங் வொர்க் மதுரையில் சிறப்பாக உள்ளது. அதுவும், தெற்கு தொகுதியில் கூடுதல் சிறப்பு.
இந்தத் தொகுதியில் அனைத்து சமுதாய மக்களுமே பாஜக-வுக்கு ஆதரவாக இருப்பதை மக்களவைத் தேர்தலிலேயே பார்த்துவிட்டோம். எங்களுக்குச் சாதகமான இத்தனை அம்சங்கள் இருப்பதால் தான் தெற்கில் போட்டியிட முயற்சிக்கிறோம். அறிந்த முகமாக இருப்பதால் கட்சியினரும் என்னை நிறுத்த விருப்பம் தெரிவிக்கலாம். மதுரை தெற்கை மட்டுமல்லாது கூடுதலாக இன்னொரு தொகுதியையும் கேட்க வேண்டும் என்பதும் கட்சியினரின் விருப்பமாக உள்ளது. அதற்கான முயற்சிகளையும் எடுப்போம்” என்றார்.