விழுப்புரம்: பாமக சார்பில், ‘உரிமை மீட்க தலைமுறை காக்க’ என்ற தலைப்பில் பிரச்சார பயணம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மற்றும் செஞ்சியில் நேற்று இரவு நடைபெற்றது. பிரச்சார பயணத்துக்கு தலைமையேற்ற பாமக தலைவர் அன்புமணி சிறப்புரையாற்றினார். அப்போது அவர், “தமிழகத்தில் நடந்து வரும் திமுக ஆட்சி ஒரு கொடுங்கோல் ஆட்சி.
4 வயது சிறுமி முதல் 80 வயது மூதாட்டி வரையில் பாதுகாப்பு இல்லை. கட்சி, ஜாதி, மதம் என பார்க்காமல், பிள்ளைகள் மற்றும் நம் பேரப் பிள்ளைகளின் எதிர்காலத்தை மனதில் கொண்டு திமுக ஆட்சியை அகற்ற வேண்டும். போதை பழக்கத்துக்கு இளைஞர்கள் ஆளாகி உள்ளனர். திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இளைஞர்களை காப்பாற்ற முடியாது.
லட்சக்கணக்கான யூதர்களை கொலை செய்த ஹிட்லர் ஆட்சியை, ‘கொடுங்கோல் ஆட்சி’ என சொல்வார்கள். தமிழகத்தின் ஹிட்லரான ஸ்டாலின், 7 விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்தார். ரவுடிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்யும் நிலையில், நமக்கு சோறு போடும் விவசாயிகள் மீது ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் குண்டர் சட்டம் போடப்பட்டது.
திமுக ஆட்சியை மறக்கவும், மன்னிக்கவும் கூடாது. திண்டிவனம் நகரம் முன் னேற்றம் அடையவில்லை. விரிவாக்கம், வசதி, வளர்ச்சியும் இல்லை. ஏரியில் பேருந்து நிலையத்தை கட்டி உள்ளனர். ஏரியின் முக்கியத்துவம் தெரியவில்லை. திண்டிவனம் பகுதியில் உள்ளசிப்காட்டில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை கொடுக்க வில்லை என்றால், மூடிவிட்டு செல்லலாம்.
6 மாதங்களில் மாற்றம் வரும். நம்முடைய ஆட்சி ஏற்படும். கல்வி மற்றும் வேலை வாய்ப்புடன் சுய மரியாதையுடன் வாழ்வதற்காக, வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இல்லை, 15 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கேட்கிறோம். உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், உள் இட ஒதுக்கீடு வழங்காத ஸ்டாலின், வன்னியர்களின் துரோகி. அவருக்கு வன்னியர்கள் வாக்களிக்க மாட்டார்கள்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே ரூ.16 கோடியில் பாலம் கட்டப்பட்டது. 3 மாதங்களில் அடித்து செல்லப் பட்டது. தேர்தலுக்கு முன்பு 505 வாக்குறுதிகளை திமுக கொடுத்தது. அனிதா மரணத்தை வைத்து, நீட் தேர்வுக்கு எதிராக பேசி, திமுக ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்துவிடுவோம் என அளித்த வாக்குறுதியை 4 ஆண்டு களாகியும் நிறைவேற்றவில்லை. 98 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம் என முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார்.
ஆனால், 13 சதவீத வாக்குறுதி மட்டும் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாதாந்திர மின் கட்டணம், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் என சொன்னார்கள். திமுக ஆட்சிக்கு வர பணியாற்றிய அரசு ஊழியர்கள், இப்போது வீதியில் போராடுகின்றனர். இவ்வளவு பொய் சொன்ன ஆட்சியை தமிழக மக்கள் பார்க்கவில்லை. பெண்கள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் துரோகம் செய்த திமுகவை விரட்டியடிக்க வேண்டும்” என்றார்.திண்டிவனத்தில் நடைபயணம் மேற்கொண்ட பாமக தலைவர் அன்புமணி.