புதுடெல்லி: மணிப்பூரில் ஏற்பட்ட கடும் வன்முறைக்குப் பிறகு முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி அந்த மாநிலத்துக்கு வரும் 13-ம் தேதி செல்ல வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரதமர் மோடி வரும் 13-ம் தேதி மிசோரம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களுக்கு செல்ல வாய்ப்புள்ளதாக மிசோரம் தலைநகர் ஐஸ்வாலில் உள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, புதிதாக அமைக்கப்பட்டுள்ள பைரபி-சாய்ராங் ரயில் பாதையை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி முதலில் மிசோரம் செல்ல உள்ளார் என்று கூறப்படுகிறது.
2023 மே மாதத்தில் மணிப்பூரில் இரு இனக் குழுக்களுக்கு இடையே வன்முறை வெடித்ததில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். மேலும், 1,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வன்முறை காரணமாக 60,000 பேர் இடம்பெயர்ந்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
வன்முறை வெடித்த பிறகு மக்களுக்கு ஆறுதல் தெரிவிக்க இத்தனை ஆண்டுகளில் பிரதமர் மோடி ஒருமுறைகூட மணிப்பூருக்கு செல்லாததை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வந்தன.
இந்த நிலையில் முதல் முறையாக மணிப்பூருக்கு பிரதமர் வரவுள்ளதாக மிசோரம் அரசின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், பிரதமரின் வருகை தொடர்பான இறுதி பயணத் திட்டம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலில் உள்ள அதிகாரிகளாலும் பிரதமரின் வருகையை உறுதிப்படுத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, பிரதமரின் வருகைக்கான தயார்நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக, மிசோரம் மாநில தலைமைச் செயலாளர் கில்லி ராம் மீனா, சட்ட அமலாக்க நிறுவனங்களுடன் நேற்று முன்தினம் ஆய்வு நடத்தியுள்ளார். இதில், பாதுகாப்பு நடவடிக்கைகள், போக்குவரத்து மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.