அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடிக்கும் படம், ‘பாம்’. இதில், காளி வெங்கட், ஷிவாத்மிகா ராஜசேகர், நாசர், அபிராமி, சிங்கம் புலி, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதை, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தை இயக்கிய விஷால் வெங்கட் இயக்கியுள்ளார். பி.எம்.ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு டி.இமான் இசை அமைத்துள்ளார். சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் தயாரித்துள்ளனர்.
படம் பற்றி விஷால் வெங்கட் கூறும்போது, “இது கற்பனையான ஊரில் நடக்கும் கதையைக் கொண்ட படம். மனிதர்களின் நம்பிக்கை சார்ந்த விஷயங்களை வைத்து இதன் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டு கிராமம். வெவ்வேறு கடவுளை வணங்கும் அவர்களுக்கு, பல்வேறு பிரச்சினைகளில் கருத்துவேறுபாடுகள் வருகிறது.
அது எப்படி முடிகிறது என்பது கதை. நம்பிக்கை என்பது அவரவர் விருப்பம் சார்ந்தது என்பதால் அது தொடர்பாக பொதுவான ஒரு கருத்தைச் சொல்லி இருக்கிறோம். டார்க் காமெடி படம். அர்ஜுன் தாஸும் காளி வெங்கட்டும் நண்பர்கள். பிரிந்திருக்கிற ஊரை அவர்கள் ஒன்று சேர்க்கிறார்கள் . இதில் தைரியம் இல்லாதவராக மற்றவர்களிடம் அடி வாங்குபவராக அர்ஜுன் தாஸ் நடித்திருக்கிறார்” என்றார்.