“வரும் காலங்களில் எந்தவொரு படமும் அனிருத் இசையில்லாமல் பண்ண மாட்டேன். ஒருவேளை அனிருத் திரைத்துறையில் இருந்து விலகிவிட்டால் அந்த தருணத்தில் மட்டுமே வேறு ஒருவரை யோசிப்பேன்.” என்று லோகேஷ் கனகராஜ் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
’கூலி’ வெளியான அடுத்த நாள் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். அப்படமும் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாமல் கடும் விமர்சனங்களை சந்தித்தது. இது தொடர்பாக எந்தவொரு பதிலுமே கூறாமல் இருந்தார் லோகேஷ் கனகராஜ். சில தினங்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து திரும்பியவர், திரையரங்கிற்கு சென்று மக்களோடு ‘கூலி’ படத்தினை கண்டுகழித்தார்.
அதனைத் தொடர்ந்து விழா ஒன்றில் கலந்து கொண்டார் லோகேஷ் கனகராஜ். அதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். அதன் தொகுப்பில் இருந்து, “’கூலி’ ஒரு டைம் டிராவல் படம், எல்.சி.யூ என எதையுமே நான் சொல்லவில்லை. அதை மக்கள் அவர்களாகவே யூகித்துக் கொண்டார்கள். சுமார் 18 மாதங்கள் படத்தைப் பற்றி எதையுமே சொல்லாமல் வைத்திருந்தேன்.
ரஜினி சார் படம் லோகேஷ் இயக்கம் என்ற சந்தோஷத்தில் இருந்தார்கள். அதை எப்படி நான் தடுக்க முடியும். அதே வேளையில் மக்களுடைய எதிர்பார்ப்புக்காக நான் எப்போதும் கதை எழுதுவதில்லை. ஒரு கதை எழுதுவேன், அது மக்களுடைய எதிர்பார்ப்புக்கு ஏற்றவகையில் இருந்தால் நல்லது. அந்த எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யவில்லை என்றால் மீண்டும் முயற்சி செய்வேன். அவ்வளவே.
’கூலி’ படத்தில் வரும் ப்ளாஷ்பேக் காட்சிகளில் நடித்தது ரஜினி சார். அதை De-Ageing செய்தோம். ஆனால், அதில் வரும் ரஜினி சாருடையல் குரல் AI தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டது. வரும் காலங்களில் எந்தவொரு படமும் அனிருத் இசையில்லாமல் பண்ண மாட்டேன். ஒருவேளை அனிருத் திரைத்துறையில் இருந்து விலகிவிட்டால் அந்த தருணத்தில் மட்டுமே வேறு ஒருவரை யோசிப்பேன்” என்று தெரிவித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.