திருநெல்வேலி: அதிமுக பிரிந்து இருந்தபடி, வரும் தேர்தலில் போட்டியிட்டால் திமுக வெற்றி பெறுவது எளிதாகிவிடும், அதிமுக 4-வது இடத்துக்குச் சென்றுவிடும் என பெங்களூரு புகழேந்தி தெரிவித்தார்.
திருநெல்வேலியில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக வருகை தந்த பெங்களூரு புகழேந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது: விஜய் மாநாடு எழுச்சியாக இருந்தது. எதிர்காலம் விஜய்க்கு என்பதை கட்சியின் இளைஞர்கள் காண்பிக்கிறார்கள். தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டால் அவரது பலம் அதிகரிக்க செய்யும்.
தேமுதிக பொதுச் செயலாளர், எடப்பாடி பழனிசாமி தங்களை முதுகில் குத்திவிட்டார் என சொல்கிறார். இதனை முன்னாலேயே நான் சொல்லிவிட்டேன். அவர்கள் எம்.பி பதவி நப்பாசையில் இத்தனை ஆண்டுகள் அவருடன் உடன் பயணித்தார்கள்.
தேமுதிக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டது. அமமுகவை வெளியே தள்ளிவிடுவார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகியோருக்கு மக்கள் தானாக கூடினார்கள். எடப்பாடி பழனிசாமிக்காக கூடும் கூட்டம் காசுகொடுத்து கூட்டும் கூட்டம்.
ஆர்எஸ்எஸ் கொள்கையை பின்பற்றினால் என்ன தவறு என சொல்லும் பாஜகவினர், திராவிட கொள்கையை பின்பற்றுவார்களா?. அமித்ஷா கூட்டணி ஆட்சிதான் என சொல்கிறார். அதற்கு எடப்பாடி பழனிசாமி பதில் சொல்லவில்லை.
அண்ணாமலை – எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஒரே மேடையில் ஒன்றாக இருந்தாலும், அவர்களுக்குள் இணக்கம் இல்லாத நிலை இருக்கிறது. அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று பேசிவிட்டு வீட்டுக்குள் சென்று சசிகலா அமர்ந்து கொள்கிறார். அதிமுகவை ஒருங்கிணைக்க பேச்சு மட்டும் போதாது செயல்பாட்டுக்கு வரவேண்டும், சீக்கிரம் நேரம் ஒதுக்கி பணி செய்யவேண்டும்.
டிடிவி தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறி விஜய் கூட சேர நினைக்கிறார். அதிமுக பலமானால் தான் இந்த தேர்தலில் வெற்றி பெறமுடியும், இப்படியே பிரிந்திருந்தால், அதிமுக 4-வது இடத்துக்கு செல்லும். சீமானுடன் தான் எடப்பாடிக்கு போட்டி இருக்கும்.
அதிமுக இப்படியே பிரிந்திருந்து போட்டியிட்டால் திமுக வெற்றி பெறுவதற்கு எடப்பாடி பழனிசாமி காரணமாகி விடுவார். அதிமுக சின்னம் தொடர்பான வழக்கு வரும் ஜனவரி மாதம் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. அதிமுகவின் இரட்டை இலை சின்னம் இப்போதும் ஆட்டத்தில் தான் இருக்கிறது.” எனத் தெரிவித்தார்.