புதுடெல்லி: செமிகான் இந்தியா மாநாட்டை டெல்லியில் தொடங்கிவைத்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் மிகச்சிறிய சிப் விரைவில் உலகின் மிகப் பெரிய மாற்றத்தை இயக்கும் என தெரிவித்தார்.
இந்தியாவில் குறைக்கடத்தி உற்பத்தியை வளர்ச்சியடையச் செய்யும் வகையில் செமிகான் இந்தியா 2025 மாநாடு புதுடெல்லியில் இன்று தொடங்கியது. இன்று முதல் வரும் 4-ம் தேதி வரை 3 நாட்களுக்கு நடைபெறும் இந்த மாநாட்டை தொடங்கிவைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “இந்தியா வலுவான பொருளாதார அடித்தளத்தைக் கொண்டுள்ளது. கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.8% ஆக பதிவாகி உள்ளது. மற்ற பொருளாதாரங்கள் நிச்சயமற்ற தன்மையுடன் போராடிக் கொண்டிருக்கும் சூழலில், இந்த வளர்ச்சியை இந்தியா பதிவு செய்துள்ளது.
உற்பத்தி, சேவை, விவசாயம், கட்டுமானம் என அனைத்துத் துறைகளிலும் காணப்படும் வளர்ச்சி, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும் என்ற நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
கச்சா எண்ணெய் கருப்புத் தங்கம் என அழைக்கப்படுவதுபோல், டிஜிட்டல் டைமண்ட் என குறைக்கடத்தி சிப்கள் அழைக்கப்படுகின்றன. கச்சா எண்ணெய் 20ம் நேூற்றாண்டை வடிவமைத்ததுபோல, குறைக்கடத்திகள் 21ம் நூற்றாண்டை வடிவமைக்கம். 600 பில்லியன் டாலர் மதிப்புள்ள உலகலாவிய குறைக்கடத்தி சந்தை வரும் ஆண்டுகளில் ஒரு ட்ரில்லியன் டாலரைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்தையில் குறிப்பிடத்தக்க பங்கைப் பெறுவதில் இந்தியா உறுதியாக உள்ளது.
செமிகான் இந்தியா நிகழ்ச்சிகள் கடந்த 2021ல் தொடங்கப்பட்டன. இதன்மூலம் ஏற்கனவே 18 பில்லியன் டாலருக்கும் அதிக முதலீட்டை இந்தியா ஈர்த்துள்ளது. மேலும் பல சிப் நிறுவனங்களுக்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளன. சிஜி பவர், கெய்ன்ஸ், மைக்ரான், டாடா போன்ற நிறுவனங்கள் இந்த துறையில் தங்கள் பயணத்தை தொடங்கி உள்ளன. நமது பயணம் தாமதமாக தொடங்கி இருக்கலாம், ஆனால் எதுவும் நம்மை தடுக்க முடியாது. இந்தியாவின் மிகச்சிறிய சிப், உலகின் மிகப் பெரிய மாற்றத்தை இயக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை
உலகம் இந்தியாவை நம்புகிறது. இந்தியாவுடன் சேர்ந்து குறைக்கடத்தியின் எதிர்காலத்தை உருவாக்க உலகம் தயாராக இருக்கிறது. இந்தியாவில் வடிவமைக்கப்பட்டது, இந்தியாவில் தயாரிக்கப்பட்டது, உலகத்தின் நம்பிக்கை இதில் உள்ளது என்று சொல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை.” என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், ஜிதின் பிரசாதா, டெல்லி முதல்வர், ஒடிசா முதல்வர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த 3 நாள் மாநாடு குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் அலுவலகம், “இந்த மாநாடு, இந்தியாவில் மேம்படுத்தப்பட்ட, விரைவான மற்றும் நீடித்த குறைக்கடத்தி சூழல் குறித்து கவனம் செலுத்தும். செமிகான் இந்தியா திட்டம், குறைக்கடத்தி ஆலை மற்றும் மேம்பட்ட தொகுப்புத் திட்டங்கள், உள்கட்டமைப்பு தயார் நிலை, நவீன உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, செயற்கை நுண்ணறிவில் புதுமை கண்டுபிடிப்புகள், முதலீட்டு வாய்ப்புகள், மாநிலங்கள் அளவிலான கொள்கை அமலாக்கம் உள்ளிட்டவை குறித்த அமர்வுகள் நடைபெற உள்ளன. அத்துடன், இந்தியாவின் குறைக்கடத்தி துறைக்கான எதிர்கால திட்டம், சர்வதேச ஒத்துழைப்பு, புத்தொழில் சூழல் வளர்ச்சி ஆகியவற்றுக்காக வடிவமைப்புடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் முன்முயற்சிகள் குறித்து எடுத்துரைக்கப்பட உள்ளன.
48-க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த 2,500-க்கும் மேலான பிரதிநிதிகள் 150-க்கும் மேலான பேச்சாளர்கள், 50-க்கும் அதிகமான உலகளாவிய தலைவர்கள், 350-க்கும் மேலான கண்காட்சியாளர்கள் உள்ளிட்ட 20,740-க்கும் அதிகமானோர் இதில் பங்கேற்க உள்ளனர். 6 நாடுகள் பங்கேற்கும் வட்டமேசை விவாதங்கள், செயல் திறன் மேம்பாடு மற்றும் புத்தொழில்களுக்கான நாடுகளின் அரங்குகள் உள்ளிட்டவை இடம் பெறவுள்ளன.
பல்வேறு நாடுகளில் ஏற்பாடு செய்யப்படும் குறைக்கடத்தி மாநாடுகள், குறைக்கடத்தித் துறையில் தொழில்நுட்ப முன்னேற்றங்களை அதிகளவில் சென்றடைவதையும், பல்வேறு தொழில்நுட்ப முன்னேற்றங்கள் நாடுகளின் குறைகடத்தி சூழல் அமைப்பை வலுப்படுத்துவதற்கான கொள்கைகளையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. குறைக்கடத்தி வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான மையமாக இந்தியாவை திகழச் செய்ய வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கின் அடிப்படையில் இம்மாநாடுகள் 2022-ல் பெங்களூருவிலும், 2023-ல் காந்தி நகரிலும், 2024-ல் கிரேட்டர் நொய்டாவிலும் நடத்தப்பட்டன.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.