புதுடெல்லி: எனது தாயை அவமதித்த ராஷ்டிரிய ஜனதா தளம் – காங்கிரஸ் கட்சிகளை நான் மன்னிக்கலாம்; ஆனால் பிஹார் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிஹார் மாநிலத்துக்கான, ஜீவிகா வாழ்வாதார கடன் கூட்டுறவு சங்கத்தை பிரதமர் நரேந்திர மோடி புதுடெல்லியில் இருந்தவாறு காணொலி காட்சி வாயிலாக இன்று (செப். 2) தொடங்கிவைத்தார். அப்போது இந்த கூட்டமைப்பின் வங்கி கணக்குக்கு ரூ.105 கோடியை பிரதமர் பரிமாற்றம் செய்தார். இந்த வாழ்வாதார நிதி கூட்டமைப்பு வாயிலாக இதில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு குறைந்த வட்டியில் கடனுதவியாக வழங்கப்பட உள்ளது.
பெண் தொழில்முனைவோர்களை உருவாக்கும் வகையில் இது செயல்படுத்தப்படவுள்ளது. கிராமப்புறங்களில் உள்ள சிறிய நிறுவனங்களுக்கும் இந்த கடன் சங்கம் கடனுதவி வழங்க இருக்கிறது. தனியார் நிறுவனங்களில் அதிக வட்டிக்கு கடன் பெறும் நிலையில் பெண் தொழில்முனைவோர் உள்ளதை கருத்தில் கொண்டு இந்த சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
சங்கத்தை தொடங்கிவைத்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “பிஹாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் – காங்கிரஸ் நடத்திய ஒரு பேரணியில் மறைந்த எனது தாயார் அவமதிக்கப்பட்டுள்ளார். ஒரு அரசியல் மேடையில் இறந்த எனது தாயார் இப்படி அவமதிக்கப்படுவது கற்பனை செய்து பார்க்க முடியாதது.
அம்மாதான் நமது உலகம். அம்மாதான் நமது சுயமரியாதை. பாரம்பரியம் நிறைந்த பிஹாரில் எனது தாயார் அவமதிக்கப்பட்டுள்ளார். இந்த அவமதிப்பு எனது தாய்க்கு மட்டுமானது அல்ல. அவர்கள், இந்த நாட்டின் தாய்மார்கள், சகோதரிகள், மகள்களை அவமதித்துள்ளார்கள். இந்த சம்பவத்தைப் பார்த்தும், கேட்டும் பிஹாரின் ஒவ்வொரு தாய்மார்களும் எவ்வளவு மோசமாக உணர்ந்திருப்பார்கள் என்பது எனக்குத் தெரியும். என் இதயத்தில் எனக்கு எவ்வளவு வலி இருக்கிறதோ, அதே அளவு வலியை பிஹார் மக்களும் அனுபவிக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும்.
அரசியலுடன் எந்த தொடர்பும் இல்லாத எனது தாயாரை ராஷ்டிரிய ஜனதா தளமும் காங்கிரஸும் ஏன் இழுக்க வேண்டும்? ஏன் அவரை தாக்க வேண்டும்? இதுபோன்று பெண்களை அவமதிப்பவர்கள், பெண்களை பலனீனமானவர்களாகக் கருதும் மனநிலையை வெளிப்படுத்துகிறார்கள். எனது தாயை அவமதித்த ராஷ்டிரிய ஜனதா தளம் – காங்கிரஸ் கட்சிகளை நான் மன்னிக்கலாம்; ஆனால் பிஹார் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.” என தெரிவித்தார்.