‘வாடிவாசல்’ படம் குறித்த அப்டேட் இன்னும் 10 நாட்களில் வெளியாகும் என்று வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட் கேர்ள்’. செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினராக மிஷ்கினும் கலந்து கொண்டார். அவர் பேசும் போது, ‘வாடிவாசல்’ குறித்தும் குறிப்பிட்டுப் பேசினார்.
”சூர்யாவும், வெற்றியும் இணைந்தால் நமக்கு ஒரு சிறப்பான படம் கிடைக்கும். அப்படிப்பட்ட ‘வாடிவாசல்’ படத்தை சீக்கிரம் தொடங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்” என்று மிஷ்கின் தனது பேச்சில் குறிப்பிட்டார். இறுதியாக பேசிய வெற்றிமாறன், ‘பேட் கேர்ள்’ படம் குறித்து பேசிமுடித்துவிட்டு, மிஷ்கின் பேசியதற்கு பதிலளித்தார்.
அதில் ‘வாடிவாசல்’ குறித்து வெற்றிமாறன், “இப்போதைக்கு என்னால் எதுவும் சொல்ல முடியாது. இரண்டு தொழில்நுட்பக் காரணங்களால் சொல்ல முடியாது. இன்னுமொரு 10 நாட்களில் சொல்கிறேன்” என்று தெரிவித்தார்.