மீண்டும் விஷ்ணு விஷால் – செல்லா அய்யாவு கூட்டணி இணைந்து ’கட்டா குஸ்தி 2’ உருவாக்க இருக்கிறார்கள்.
செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவான படம் ‘கட்டா குஸ்தி’. இப்படத்துக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இதனால் இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்து ‘கட்டா குஸ்தி 2’ படத்தினை உருவாக்க இருக்கிறார்கள். இப்படத்தினை வேல்ஸ் நிறுவனம் மற்றும் விஷ்ணு விஷால் இணைந்து தயாரிக்கவுள்ளனர்.
முதல் பாகத்தினைப் போலவே இப்படமும் முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகிறது. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாவதால், முதல் பாகத்தில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ், முனிஷ்காந்த், காளி வெங்கட், ரெடின் கிங்ஸ்லீ உள்ளிட்டோர் இதிலும் அதே கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்கள். இது தொடர்பான அறிமுக வீடியோவினை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படத்தினையும் முடிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. முதல் பாகம் ரூ.5 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்டு ரூ.30 கோடிக்கும் அதிகமாக வசூல் சாதனை செய்தது. ஆகையால் 2-ம் பாகம் ஓடிடி உரிமம் இப்போதே விற்கப்பட்டு விட்டது. விநியோகஸ்தர்கள் மத்தியிலும் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.