தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக சத்யஜோதி தியாகராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகஸ்ட் 2020-ல் இயக்குநர் பாரதிராஜா மற்றும் பல முன்னணி தயாரிப்பாளர்களுடன் தோற்றுவிக்கப்பட்டது. தற்போது இந்தச் சங்கத்தில் 365-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்ட பெரிய சங்கமாக வளர்ந்துள்ளது.
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய தொழிலாளர்கள் சம்மேளம் (FEFSI) மற்றும் அதை சார்ந்த அனைத்து சங்கங்களுடனும், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கங்களுடன் இணைந்து செயலாற்றி வருகிறது. அதனால் தான், இன்று இந்த சங்கத்தை மத்திய அரசும், மாநில அரசும் அங்கீகரித்து, சினிமா துறை சார்ந்த அனைத்து கலந்துரையாடல்கள் மற்றும் முடிவுகளில் இணைத்துள்ளனர்.
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம், திரைப்பட தலைப்பு, விளம்பர அனுமதி மற்றும் உறுப்பினர்களுக்கு தேவைப்படும் அனைத்து சேவைகளையும் வழங்கி வருகிறது. அதன் காரணமாக தான், ஒவ்வொரு மாதமும் பல புதிய உறுப்பினர்கள் சங்கத்தில் இணைந்து வருகிறார்கள். மேலும், இந்திய சினிமாவில் முதன் முறையாக தயாரிப்பாளர் சங்கமே ஒரு திரைத்துறை வழிகாட்டி நூலை (Trade Guide) ஒவ்வொரு மாதமும் கொண்டு வருகிறது. அதன் மூலம் பல தயாரிப்பாளர்களுக்கும், திரைத்துறைக்கு தேவைப்படும் அனைத்து விபரங்களும் தெரிவிக்கப்படுகின்றன.
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடந்து, புதிய நிர்வாக குழு அமைக்க வேண்டும். அதன் படி, 2025-28-க்கான புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க, இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் தேர்தல் அதிகாரியாக சங்கத்தால் நியமிக்கப்பட்டு, தேர்தல் நடைபெற்றது. தகுதி உள்ள 7 அலுவலக நிர்வாகிகள் மற்றும் 10 செயற்குழு உறுப்பினர்கள் ஒரு மனதாக, எதிர்ப்பின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதில் தலைவராக சத்யஜோதி தியாகராஜன், செயலாளராக டி.சிவா, துணைத் தலைவர்களாக எஸ்.ஆர்.பிரபு, எஸ்.எஸ்.லலித் குமார், பொருளாளராக தனஞ்ஜெயன், இணைச் செயலாளர்களாக முகேஷ் மெஹ்தா, வினோத் குமார் மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக கே.எஸ்.ரவிக்குமார், சுந்தர்.சி, விக்னேஷ் சிவன், ஆர்.கண்ணன், ரமேஷ் பி.பிள்ளை, லக்ஷ்மன் குமார், சுதன் சுந்தரம், கமல் போஹ்ரா, கார்த்திகேயன் சந்தானம் மற்றும் நிதின் சத்யா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.