சென்னை: கச்சத்தீவு இலங்கைக்கு உரியது, அதை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது என்று கூறிய இலங்கை அதிபரின் பேச்சு இருநாட்டு உறவுக்கு எதிரானது இந்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க கச்சத்தீவுக்கு இருநாள் பயணம் மேற்கொண்டு, அங்கு கடற்படை அதிகாரிகளுடன் கச்சத்தீவு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து “கச்சத்தீவு இலங்கைக்கு உரியது, அதை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது” என கூறியுள்ளார்.
அநுர குமார திசாநாயக்கவின் இந்தப் பேச்சு இந்தியா – இலங்கை நல்லுறவுக்கு வலுச்சேர்க்காது. மாறாக இந்தியாவை குறிப்பாக தமிழ்நாட்டு மக்களை ஆத்திரமூட்டும் செயலாக அமைந்துள்ளது.
கடந்த 1974 ஜூன் 26 ஆம் தேதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி – இலங்கை அதிபர் சிறிமாவோ பண்டாரநாயகா ஆகியோர் செய்து கொண்ட ஒப்பந்தம் இன்றும் சட்டபூர்வ ஒப்புதலைப் பெறவில்லை என்பதை இலங்கை அதிபர் கருத்தில் கொள்ள வேண்டும்.
கச்சத்தீவு தொடர்பான ஒப்பந்த முயற்சிகளுக்கு ஆரம்ப நிலையிலே எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு, கடல் எல்லையை பிரித்துக் கொள்வது தொடர்பான ஐக்கிய நாடுகள் சபை வகுத்துள்ள நெறிமுறைகளுக்கு எதிராக செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை கைவிட்டு, கச்சதீவு மீட்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.
தமிழ்நாட்டின் கோரிக்கை நியாயமானது என்பதை அரை நூற்றாண்டுக்கும் மேலான அனுபவம் உணர்த்தியுள்ளது. தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளிலிருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது, இலங்கை கடற்படையினரும், கடல் கொள்ளையர்களும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
அண்மைக்காலமாக தாக்குதல் நடத்துவதுடன் தமிழக மீனவர்களை கைது செய்து, அவர்கள் வசமிருக்கும் மீன்கள், வலைகள், படகுகள் உள்ளிட்ட உபகரணங்களை பறிமுதல் செய்து, இலங்கை அரசு உரிமை கொண்டாடுவதும் அதிகரித்து வருகிறது.
கடந்த மாதம் 7 ஆம் தேதி, ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தெற்கு வாடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகில் மீன் பிடிக்க சென்ற 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து, வெளிச்சுரா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர். இந்த நீதிமன்றம் 10 மீனவர்களுக்கும் தலா ரூ 5 கோடி அபராதமும், கட்டத்தவறினால் 18 மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டு, வெளிக் கடை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க “இந்திய மீனவர்கள், இலங்கை கடல் பகுதிக்குள் மீன் பிடித்து சிக்கினால், அவர்களை எளிதாக விட மாட்டோம். பிடிபடும் படகுகளை திருப்பித் தர மாட்டோம். அது இலங்கைக்கே சொந்தமாகும்“ என்று கூறியிருப்பது அதிகார ஆணவத்தின் உச்சமாகும்.
இலங்கை அதிபரின் கச்சத்தீவுப் பயணம், கச்சத்தீவு மற்றும், தமிழக மீனவர்கள் குறித்த அவரது அணுகுமுறை தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பையும், பதற்றத்தையும் உருவாக்கியுள்ளது என்பதை ஒன்றிய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகம் கருத்தில் கொள்ள வேண்டும்.
இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்யவும், அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களை சேதாரம் இல்லாமல் திருப்பி வழங்கவும், இந்திய மீனவர்கள், குறிப்பாக தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படவும், கச்சத்தீவு மீட்கப்பட்டு இந்தியாவின் கடல் பரப்பியல் எல்லை உரிமை நிலை நாட்டப்படவும் ஒன்றிய அரசு பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது’ எனத் தெரிவித்துள்ளார்.