நடிகை ஸ்ரீதேவி, ரஜினிகாந்த், சன்னி தியோல் நடித்த இந்தி படம், ‘சால்பாஸ்’. பங்கஜ் பராஷர் இயக்கிய இந்தப் படம் 1989-ம் ஆண்டு வெளியானது. இதில், ஸ்ரீதேவி இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. சகோதரிகளான அஞ்சுவும் மஞ்சுவும் சிறு வயதிலேயே பிரிந்து வெவ்வேறு சூழலில் வளர்கிறார்கள். அவர்கள் எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்று கதை செல்லும்.
இந்நிலையில் இந்தப் படத்தை இந்தக் காலத்துக்கு ஏற்ப, ரீமேக் செய்ய இருக்கின்றனர். அதில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நாயகியாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. அம்மா நடித்த கதாபாத்திரத்தில் மகள் நடிப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இயக்குநர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட விவரங்கள், செப்டம்பர் இறுதியில் அறிவிக்கப்படும் என்கிறார்கள்.