சென்னை: புச்சிபாபு கிரிக்கெட் தொடரில் டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன் – ஜம்மு & காஷ்மீர் அணிகள் இடையிலான அரை இறுதி ஆட்டம் சென்னையில் உள்ள சிஎஸ்கே உயர்திறன் மையத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன் அணி முதல் நாள் ஆட்டத்தில் 90 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 265 ரன்கள் எடுத்திருந்தது.
நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன் ஆட்ட நேர முடிவில் 180 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 503 ரன்கள் குவித்தது. விமல் குமார் 112, பிரதோஷ் ரஞ்ஜன் பால் 91, ஆந்த்ரே சித்தார்த் 57, அஜிதேஷ் 101, அம்ப்ரிஷ் 62 ரன்கள் விளாசினர். ஜம்மு & காஷ்மீர் அணி தரப்பில் குவல்பிரீத் சிங், தஸிம் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.
குருநானக் கல்லூரியில் நடைபெற்று வரும் அரை இறுதி ஆட்டத்தில் ஹரியானா – ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன. இதன் முதல் இன்னிங்ஸில் ஹைதராபாத் 225 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய ஹரியானா முதல் நாள் ஆட்டத்தில் விக்கெட் இழப்பின்றி 14 ரன்கள் எடுத்திருந்தது.
நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய அந்த அணி 79.3 ஓவர்களில் 208 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஹிமான்சு ராணா 75, பர்த் வட்ஸ் 36 ரன்கள் சேர்த்தனர். ஹைதராபாத் அணி தரப்பில் ரோஹித் ராயுடு 5 விக்கெட்களை வீழ்த்தினார். 17 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய ஹைதராபாத் அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 16 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 49 ரன்கள் எடுத்தது.