ஸ்லோயர் ஒன் பந்துகளுக்கு பெயர் பெற்ற ஹர்ஷல் படேல் தான் பிறந்த மண்ணான குஜராத் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார். அதாவது 14 ஆண்டுகள் ஹரியாணா அணிக்கு ஆடிய பிறகு தன் சொந்த மாநில அணிக்குத் திரும்புகிறார் ஹர்ஷல் படேல். 2025-26 உள்நாட்டுக் கிரிக்கெட் தொடர்களில் குஜராத் அணிக்கு ஆடுகிறார் ஹர்ஷல் படேல்.
அகமதாபாத்தில்தான் இவரது குடும்பம் உள்ளது, இப்போது தனக்குக் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட வாய்ப்புக் கிடைத்ததாக ஹர்ஷல் படேல் தனது இந்த தாய்மண் திரும்புகையை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளார்.
குஜராத் அணிக்காக இவர் ஆடும் முதல் தொடர், ஒரு முத்தரப்பு தொடர் ஆகும். இதில் குஜராத் மாநிலத்தின் மற்ற இரு அணிகளான பரோடா, சவுராஷ்டிரா அணிகளும் பங்கேற்கின்றன.
குஜராத்தில் பிறந்த இவர் 2008-09-ல் லிஸ்ட் ஏ போட்டிகளில் குஜராத்திற்காக அறிமுகமானார். 2010 யு-19 உலகக் கோப்பைக்குப் பிறகே ஏனோ ஹர்ஷல் படேல் ஹரியாணாவுக்கு வந்து விட்டார். 2011-12-ல் தான் ஹரியாணா அணிக்காக முதல் தரக் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார். அப்போது முதல் அனைத்து வடிவங்களிலும் ஹர்ஷல் படேல் ஹரியாணா அணியின் முதுகெலும்பாகவே மாறிவிட்டார்.
74 முதல் தரப் போட்டிகளில் 246 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் ஹர்ஷல் படேல். இதில் சராசரி 24 என்பதோடு 12 முறை 5 விக்கெட்டுகளை ஒரு இன்னிங்ஸில் கைப்பற்றி அசத்தியுள்ளார். ஹரியாணா அணி வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அடைந்த உச்சத்திற்கு ஹர்ஷல் படேலும் ஒரு காரணம். 2023-24-ல் விஜய் ஹசாரே டிராபியை ஹரியாணா வென்ற அணியின் முக்கிய வீரர் ஹர்ஷல் படேல்.
அவர் தனது இந்த மாற்றம் பற்றிக் கூறும்போது, “2010-11 முதல் அதாவது என் 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் நாட்களிலிருந்து என் தொழில் முறை கிரிக்கெட் வாழ்க்கை முழுதும் ஹரியாணாவுக்காகச் செலவிட்டேன். அவர்களுக்கு நான் நிறைய கடமைப் பட்டிருக்கிறேன். 18 வயதில் ஹரியாணாவுக்குச் சென்று அங்கு வெற்றிகரமாக ஆட முடியாது போயிருந்தால் நான் அமெரிக்காவுக்குச் சென்றிருப்பேன். இந்தியாவில் கிரிக்கெட் ஆடியிருக்க மாட்டேன்.
என் குடும்பத்தை விட்டு அதிகம் பிரிந்து இருந்து விட்டேன். இனி அவ்வாறு ஓட்டுவது கடினம். ஆகவே கரியரின் முடிவை குஜராத்திலேயே ஆடி தீர்மானிக்க முடிவெடுத்து விட்டேன். அதற்கான வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சியே.
ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு ஆடி 13 கேம்களில் 16 விக்கெட்டுகள் என்று அபாரமான சீசனைக் கொண்டாடினார் ஹர்ஷல் படேல். 25 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக ஆடியுள்ளார். இப்போது இவர் இந்திய அணிக்கு ஆட முடியுமா என்பது தெரியவில்லை. ஆனால் அதைப்பற்றியெல்லாம் தான் யோசிக்கவில்லை என்றும் 10-15 ஓவர்களை ஒரு நாளைக்கு வீச முடிகிறதா அதற்கான தாகமும் உடல் வலுவும் இருக்கிறதா என்பதே இப்போதைய என் அக்கறை என்று ரத்தினச் சுருக்கமாகக் கூறியுள்ளார் ஹர்ஷல் படேல்.