மதுரை: குடிநீர் உள்ளிட்ட பொது வளங்கள் அனைத்து சமூக மக்களுக்கும் பாகுபாடு இல்லாமல் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் தலைவன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த திருமலைச்சாமி, எஸ்சி, எஸ்டி வன்கொடுமை வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை ரத்து செய்து ஜாமீன் வழங்கக்கோரி திருமலைச்சாமி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது திருமலைச்சாமி மீது புகார் அளித்த பட்டியலின பெண் நேரில் ஆஜராகி அவருக்கு ஜாமீன் வழங்கினால், அவர் வீடு அருகே இருக்கும் பொது குடிநீர் குழாயில் தண்ணீர் எடுக்கச் செல்லும் போது மீண்டும் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது என அச்சம் தெரிவித்தார்.
இதையடுத்து தலைவன்கோட்டை கிராமத்தில் பொது குடிநீர் குழாய்களின் எண்ணிக்கையை அதிகரித்து, குடிநீர் உள்ளிட்ட இயற்கை வளங்களை பெறுவதில் மக்கள் மத்தியில் பாகுபாடு இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்த அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவுபடி பொது குடிநீர் குழாய்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் உயர் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: குடிநீர் உள்ளிட்ட பொது வளங்கள் பொது சமூகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் எந்தவித பாகுபாடும் இல்லாமல் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இதனை மேற்பார்வையிட குழு அமைக்க வேண்டும். அனைத்துப்பகுதிகளிலும் பொது சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரும் எந்த பாகுபாடும் இல்லாமல் எளிதாக அணுகும் வகையில் போதுமான எண்ணிக்கையிலான தண்ணீர் குழாய் இணைப்புகள் அமைக்க வேண்டும்.
1989-ம் ஆண்டின் பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் பிரிவு 21-ன் கூறப்பட்டிருப்பதை குறிப்பாக தண்ணீரைப் பகிர்ந்து கொள்வது தொடர்பானதை முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
நீதிமன்ற உத்தரவுகளை முறையாக அமல்படுத்த காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்களுக்கு டிஜிபி சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். பொது வளங்களைப் பகிர்ந்து கொள்வதிலும் பொது வசதிகளைப் பயன்படுத்துவதிலும் பல்வேறு சமூக மக்களுக்கு இடையே எந்த பாகுபாடும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய மக்களிடையே மனநிலையில் மாற்றம் ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தலைவன்கோட்டை கிராமத்தில் அமைக்கப்பட்ட குழுவை போன்று அனைத்து மாவட்டங்கள் மற்றும் பஞ்சாயத்து ஒன்றியங்களிலும் அமைத்து ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்வது சிறப்பாக இருக்கும். இதனால் எதிர்காலத்தில் அரசியலமைப்பு சட்டம் மிகவும் விரும்பும் மக்கள் வேற்றுமையில் ஒற்றுமை நிலையை அடைய முடியும். இந்த வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளை நீதிமன்றம் பாராட்டுகிறது. இந்த நடவடிக்கையை அதே மனப்பான்மையுடன், நீர்த்துப்போகச் செய்யாமல், சமரசமும் இல்லாமல் முன்னெடுத்துச் செல்ல வேண்டியது அவசியம் என அதிகாரிகளுக்கு நினைவுபடுத்துகிறோம். மனு முடிக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.