சென்னை: கியூரி மருத்துவமனை சார்பில் ஒரு மாதம் நடத்தப்பட்ட சிறுநீரக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சிறுநீரக ஆரோக்கியம் குறித்த படைப்புகளை பள்ளி மாணவர்களும், சிகிச்சைகள் பற்றிய ‘ரீல்ஸ்’களை கல்லூரி மாணவர்களும் உருவாக்கினர். இலவச சிறுநீரகப் பரிசோதனை முகாமில் ஏராளமான மக்கள் பங்கேற்று பயன்பெற்றனர்.
சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள கியூரி மருத்துவ மனை (சென்னை சிறுநீரகம் மற்றும் ரோபோட்டிக்ஸ் நிறுவனம்) சிறுநீரக மருத்துவத் துறை சார்பில் ஆகஸ்ட் மாதம் முழுவதும் சிறுநீரக ஆரோக்கியம் மற்றும் ஆரம்ப நிலையில் பிரச்சினையை கண்டறிதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்வை நடத்தியது.
பள்ளிகளுக்கு இடையிலான ஓவியப் போட்டியில் சிறுநீரக ஆரோக்கியத்தை மையமாகக் கொண்ட படைப்புகளை மாணவர்கள் உருவாக்கினர். மாணவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்காக இலவச சிறுநீரகப் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு அமர்வுகள் நடத்தப்பட்டன.
அதேபோல், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, டயாலிசிஸ் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு தலைப்பு களில் மாணவர்கள் பயனுள்ள ‘ரீல்ஸ்’களை உருவாக்கினர். இறுதி நாளான நேற்று முன்தினம் மருத்துவமனையில் இலவச சிறுநீரகப் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
ஏராளமானோர் இம்முகாமில் பங்கேற்று சிறுநீரகப் பரிசோதனை செய்து கொண்டனர். அப்போது சிறுநீரகம் சார்ந்த உண்மைகள் மற்றும் தவறான தகவல்கள் குறித்து சிறுநீரக மருத்துவர் குகன் பேசினார். அதேபோல், சிறுநீரக நோயாளிகள், அவர்களின் பராமரிப்பாளர்கள் மற்றும் மருத்துவக் குழுவினருடன் நடந்த சிந்தனையூட்டும் கலந்துரையாடலில் சிறுநீரக மருத்துவர் அஜய் ரதோன் உரையாற்றினார்.
கியூரி மருத்துவமனை தனது மருத்துவ நிபுணத்துவத்துடன், சமூக விழிப்புணர்வு முயற்சிகளையும் இணைத்து, சிறுநீரக சிகிச்சை மக்களுக்கு எளிதில் கிடைக்கச் செய்வதற்கு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.