புதுடெல்லி: அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரியவும், பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதி தேர்வில் (‘டெட்’) தேர்ச்சி பெறுவது கட்டாயம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்துக்கும், பதவி உயர்வுக்கும் ‘டெட்’ தகுதித் தேர்வை கட்டாயமாக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து பல்வேறு ஆசிரியர்கள் கூட்டமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நீதிபதிகள் தீபாங்கர் தத்தா, மன்மோகன் அமர்வில் இந்த வழக்கு விசாரணை நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்துள்ள தீர்ப்பு:
கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தில் இருந்து மொழி, மதவாரி சிறுபான்மை பள்ளிகளுக்கு விலக்கு அளித்து பிறக்கப்பட்ட தீர்ப்பில் சில சந்தேகங்கள் உள்ளன. அவற்றை களைய அரசியல் சாசன அமர்வை ஏற்படுத்தி விசாரிக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்கிறோம். அதுவரை, அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளும் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தை ஏற்றுத்தான் நடக்க வேன்டும்.
கட்டாயக் கல்வி உரிமை சட்டம் வருவதற்கு முன்பாக 20 அல்லது 30 ஆண்டுகள் பணியில் உள்ள ஆசிரியர்ககளை ‘டெட்’ தேர்வை எழுதி தகுதி பெறச் சொல்வது பொருத்தமாக இருக்காது என்பதால், உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, பணிக்காலம் 5 ஆண்டுகள் மட்டுமே உள்ள ஆசிரியர்களுக்கு டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதில் இருந்து விலக்கு அளிக்கிறோம். அதேநேரம் 5 ஆண்டுகளுக்கு குறைவான பணிக்காலம் கொண்ட ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற விரும்பினால் கட்டாயம் ‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
ஆனால், கட்டாயக் கல்வி உரிமை சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக ஆசிரியராக பணியில் சேர்ந்து 5 ஆண்டுகளுக்கு மேல் பணிக்காலத்தை கொண்ட ஆசிரியர்கள் அடுத்த 2 ஆண்டுகளுக்குள் கட்டாயம் ‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும். அவர்களை ஓய்வு பெற்றவர்களாக கருதி, ஓய்வூதிய பலன் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
மாற்றுத் திறன் உள்ளிட்ட குறைபாடுகளால் ‘டெட்’ தேர்வை எழுத முடியாத ஆசிரியர்களின் கோரிக்கையை மாநில அரசுகள் பரிசீலிக்கலாம். ஆசிரியர் பணியில் சேர விரும்பும் ஒவ்வொருவரும், பதவி உயர்வை விரும்பும் ஆசிரியர்களும் கட்டாயம் ‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெற்று முழு தகுதியுடையவர்களாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியராக பணியில் தொடர முடியாது. இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.