புதுச்சேரி: ஒருபுறம் ராகுல் மன்னிப்பு கேட்க கோரி புதுவை காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட வந்த பாஜகவினர். மறுபுறம், மோடி பதவி விலகக் கோரி அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் கோஷம் எழுப்பினர். இதனால் நகரெங்கும் கடும் நெரிசல் ஏற்பட்டது.
பிஹாரில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்ட மேடையில் பிரதமரையும், அவரது தாயாரையும் தரக்குறைவாக பேசிய காங்கிரஸ் கட்சியினரை கண்டித்தும், ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும் புதுச்சேரி பாஜகவினர் சுதேசி மில் அருகில் இருந்து பேரணியாக புறப்பட்டு காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட வந்தனர். இதில், பாஜக மாநிலத் தலைவர் ராமலிங்கம் தலைமையில் அமைச்சர் ஜான்குமார், எம்எல்ஏக்கள் சாய் சரவணன் குமார், கல்யாண சுந்தரம், தீப்பாய்ந்தான் உட்பட பலரும் பங்கேற்றனர்.
பேரணி சுதேசி மில்லில் இருந்து புறப்பட்டு அண்ணாசாலை வழியாக வந்தது. காமராஜர் சிலையை தாண்டியவுடன் அண்ணாசாலை – கொசக் கடை வீதி சந்திப்பில் தடுப்புகளை வைத்து போலீஸார் போராட்டக்காரர்களை தடுத்தனர். தடுப்புகளை தாண்ட முற்பட்ட பாஜகவினர் ராகுலை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். சிலர் ராகுல் புகைப்படத்தை கிழித்து எறிந்தும், தீயிட்டும் எதிர்ப்பை தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து அண்ணாசாலையில் பாஜக மாநிலத் தலைவர் ராமலிங்கம் அங்கிருந்த வேனில் ஏறி பேசியது: “இது டிரெய்லர்தான். விரைவில் பாஜக எழுச்சி மாநாடு நடத்தவுள்ளோம். முன்னாள் முதல்வர் நாராயணசாமியின் பொய் பிரச்சாரத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள். உக்ரைனில் நடிகர் ஆட்சிக்கு வந்ததால் தான் அந்நாடு அவல நிலைக்கு சென்றுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு சவால்விடும் ஒரே தலைவர் மோடி தான்.
சரியான தலைவரை தேர்ந்தெடுப்பது அவசியம். கடந்த ஐந்து ஆண்டுகளில் புதுச்சேரியில் நெருக்கடியான நிலை இருந்தது. நாங்கள் வாக்குப் பெட்டியை திருடவோ, ஊழல் செய்யவோ அவசியம் இல்லை. இன்னும் 3 ஆண்டுகளில் பிரதமர் மோடி ஆசிரமம் சென்று விடுவார். அவருக்கு குடும்பமோ, குழந்தைகளுக்கு சொத்து சேர்க்க வேண்டியதில்லை. பிரதமர் ஒரு பைசா லஞ்சம் வாங்கியதாக யாரும் கூற முடியாது. நாங்கள் திராவிட மாடல் ஆட்சி அல்ல.

கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் புதுச்சேரியில் வென்றதால் சிங்கிள் டீக்குக்கூட பயன் இல்லை. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் தேசிய ஜனநாயக் கூட்டணி ஆட்சி மலரும், முதல்வர் ரங்கசாமி முதல்வராவார். அதிமுக கரத்தோடு இணைந்து பாஜக – என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியை புதுச்சேரியில் அமைப்போம் என்றார்.
இதே நேரத்தில் காங்கிரஸ் அலுவலகம் உள்ள கலவை சுப்பராயசெட்டித் தெரு – அண்ணாசாலை சந்திப்பில் எம்எல்ஏ வைத்தியநாதன், முன்னாள் எம்எல்ஏ அனந்த ராமன் மற்றும் காங்கிரஸார் கூடினர். அவர்கள் பிரதமர் மோடி பதவி விலகக்கோரி கோஷம் எழுப்பினர். அவர்களையும் தடுப்புகள் வைத்து போலீஸார் தடுத்திருந்தனர். இதனால் நகரெங்கும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.