டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் பட்டியலில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் ஜோ ரூட்டிற்கு அடுத்த பெரிய சவால் வரவிருக்கும் ஆஷஸ் தொடர். அதுவும் ஆஸ்திரேலியாவில் நடைபெறுவதால் அவருக்கு பெரும் சவால் காத்திருக்கிறது, ஆஸ்திரேலியாவில் அவர் இன்னும் சதம் எடுத்ததில்லை என்பதும் அவர் முதுகில் ஒரு பெரும் அழுத்தமாக இருந்து வருகிறது.
ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் கிரிகெட்டில் ஜோ ரூட் 27 இன்னிங்ஸ்களில் 892 ரன்களையே எடுத்துள்ளார். சராசரி 35.68. எனவே இந்த முறை அவர் பேட்டிங்கில் சொதப்பினால் அவரது கிரிக்கெட் கரியரும் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம். இந்த எச்சரிக்கையை விடுப்பவர் முன்னாள் இங்கிலாந்து அணியின் இந்திய வம்சாவளி இடது கை ஸ்பின்னர் மாண்ட்டி பனேசர்.
இந்திய ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த மாண்ட்டி பனேசர் கூறியதாவது: அடுத்த ஆண்டு அவருக்கு எப்படி போகிறது என்பதைப் பொறுத்தே ஜோ ரூட்டின் கரியரின் போக்கு தெரியவரும். குறிப்பாக அடுத்த மாதம் தொடங்கும் ஆஷஸ் தொடர் ஜோ ரூட்டிற்கு மிக மிக முக்கியம். விராட் கோலிக்கு என்ன நடந்தது என்பதைப் பார்த்தோமே. ஆஸ்திரேலியா போனார் கோலி, ஆனால் 4-வது, 5-வது ஸ்டம்ப்பில் பிட்ச் ஆகும் பந்துகளை என்ன செய்வதென்றே அவருக்குத் தெரியவில்லை.
அதுதான் கோலியை ரிட்டையர்மெண்ட்டுக்குத் தூண்டியது. அதே போல்தான் ஜோ ரூட்டிற்கு ஆஷஸ் தொடர் சரியாக அமையவில்லை எனில் அவரது கரியரும் மோசமாகி விடும். ஆமாம். ஒரு தொடரை வைத்து கூற முடியுமா என்றால் அதுதான் உண்மை.. ஏனெனில் ஆஷஸ் தொடர் என்பது மற்ற தொடர்கள் போல் அல்ல. தோற்றால் இங்கிலாந்து பயிற்சியாளர், கேப்டன் அனைவருமே காலி.
திடீரென மக்கள் கேள்வி கேட்கத் தொடங்குவார்கள். எனவே ஆஸ்திரேலியாவில் விளையாடுகிறோமா மிகவும் எச்சரிக்கை தேவை. நாம் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் சரி ஆஸ்திரேலியாவில் ஆடினால்தான் எடுபடும். ஆஸ்திரேலிய பவுலிங் அட்டாக் வலுவானது, ரூட்டிற்கு பெரும் சவால் காத்திருக்கிறது. இதுதான் ஆஸ்திரேலியாவின் வலுவான பந்து வீச்சு அணியாகும்.
ஜோ ரூட் இருக்கும் பார்முக்கு அவர் சதம் எடுக்கத்தான் ஆடுவார். அடிலெய்ட் அல்லது மெல்போர்னில் பவுன்ஸ், வேகம் அதிகம் இல்லாத பிட்ச்களில் ஜோ ரூட் சதமெடுக்கலாம். ஆனால் பவுன்ஸ் கொஞ்சம் அதிகமிருந்தால் ஜோ ரூட் அவ்வளவுதான். இவ்வாறு கூறினார் மாண்ட்டி பனேசர்.