ஜெய்ப்பூர்: குடியரசு துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த ஜெகதீப் தன்கர், ராஜஸ்தானில் முன்னாள் எம்எல்ஏவுக்கான ஓய்வூதியத்தை தொடர்ந்து வழங்க விண்ணப்பித்துள்ளார்.
குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர், கடந்த ஜூலை மாதம் 21-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இவர் ராஜஸ்தான் மாநிலத்தின் கிஷான்கர் சட்டப்பேரவை தொகுதியில் கடந்த 1993-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு வரை காங்கிரஸ் எம்எல்ஏ.வாக இருந்தார். இதற்கான ஓய்வூதியத்தை இவர் கடந்த 2019-ம் ஆண்டு வரை பெற்றார். இவர் மேற்குவங்க ஆளுநராக நியமிக்கப்பட்டதால், இவரது முன்னாள் எம்எல்ஏ ஓய்வூதியம் நிறுத்தப்பட்டது. மேற்குவங்க ஆளுநர் பதவிக்கு பின், அவர் குடியரசு துணைத் தலைவரானார்.
தற்போது இப்பதவியை இவர் ராஜினாமா செய்ததால், மீண்டும் முன்னாள் எம்எல்ஏ ஓய்வூதியத்தை வழங்க கோரி இவர் ராஜஸ்தான் தலைமை செயலகத்தில் விண்ணப்பித்தார். குடியரசு துணைத் தலைவராக இவரது ராஜினாமா ஏற்கப்பட்ட தேதி முதல் ஓய்வூதியம் வழங்குவதற்கான பணியை ராஜஸ்தான் தலைமை செயலகம் தொடங்கியுள்ளது.
ராஜஸ்தான் முன்னாள் எம்எல்ஏ 5 ஆண்டு காலம் பதவி வகித்திருந்தால் அவருக்கு மாதம் ரூ.35,000 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. 70 வயதுக்கு மேல் ஓய்வூதியம் 20 சதவீதம் கூடுதலாக வழங்கப்படும். ஜெகதீப் தன்கருக்கு தற்போது 74 வயது ஆவதால், அவருக்கு மாதம் ரூ.42,000 ஓய்வூதியம் கிடைக்கும் என ராஜஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.