சென்னை: அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்றது.
இதுகுறித்து அதிமுக சார்பில் வெளியான செய்திக்குறிப்பில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை, ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழக அலுவலகத்தில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், 2026-ல் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலையொட்டிய பணிகளை எவ்வாறு ஆற்ற வேண்டும் என்பது குறித்து, எடப்பாடி பழனிசாமி விரிவாக ஆலோசனை வழங்கினார்”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026 தேர்தலுக்கு தயாராகும் வகையில் ‘மக்களை காப்போம் தமிழகம் மீட்போம்’ என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி 234 தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்தச் சூழலில், தேர்தல் எதிர்கொள்வதற்கு அடுத்த கட்டமாக மேற்கொள்ளவேண்டிய வியூகங்கள் குறித்து இன்று ஆலோசனை நடத்தப்பட்டதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.