மதுரை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் ஆதிதிராவிட மாணவர்கள் மாநில அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதால், மத்திய அரசின் என்எம்எம்எஸ் உதவித் தொகையை பெற முடியாமல் தவித்து வருகின்றனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதில் சில பள்ளிகளுக்கு இன்னும் உதவித்தொகை கிடைக்கவில்லை என்று புகார்கள் உள்ளன.
இதற்கிடையில், மத்திய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டத்தில் (என்எம்எம்எஸ்) தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 முடிக்கும் வரை மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதில் தற்போது மாநில அரசின் (ஸ்காலர்ஷிப்) கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்களுக்கு மத்திய அரசின் என்எம்எம்எஸ் உதவித்தொகை கிடைக்காமல் தவிக்கின்றனர்.
இதுகுறித்து ஆதிதிராவிட மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது: மாநில அரசு சார்பில் ஆதிதிராவிட மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதில் என்எம்எம்எஸ் எனும் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது.
ஏற்கெனவே உதவித்தொகை பெறுபவர்கள் இத்திட்டத்தின்கீழ் உள்ள போர்ட்டலில் நுழைய முடியவில்லை. இதில் அதிகபட்சமாக மாநில அரசு ஆண்டுக்கு ரூ.3,500 வழங்குகிறது. ஆனால், மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் வழங்குகிறது. இதில் ஏற்கெனவே மாநில அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதால் மத்திய அரசின் திட்டத்தை பெற போர்ட்டலில் விண்ணப்பிக்க முடியவில்லை.
எனவே மத்திய அரசின் என்எம்எம்எஸ் திட்டத்தில் உதவித்தொகை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், தமிழகம் முழுவதும் இந்தப் பிரச்சினை உள்ளது. மாநில அரசின் கல்வி உதவித்தொகை பெறும் ஆதிதிராவிட மாணவர்கள், மத்திய அரசின் என்எம்எம்எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தும் ஆதார் எண் மூலம் அந்த போர்ட்டலில் விண்ணப்பிக்க முடியவில்லை. இதுகுறித்து அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளோம். விரைவில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக தெரிவித்துள்ளனர், என்று கூறினார்.