நிச்சயம் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையில் கடந்த முறை கோவில்பட்டி தொகுதியில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இறக்குமதி வேட்பாளராக வந்து போட்டியிட்டார். அவரால் ஜெயிக்க முடியவில்லை என்றாலும் திமுக கூட்டணியின் சிபிஎம் வேட்பாளரை மூன்றாமிடத்துக்கு தள்ளி இரண்டாமிடம் பிடித்தார். தினகரனுக்கு இருந்த அந்த நம்பிக்கைகூட திமுக-வுக்கு இன்னும் இந்தத் தொகுதி மீது ஏற்படவில்லை. காரணம், இதுவரை ஒருமுறைகூட இங்கே திமுக கொடிநாட்ட முடியாமல் இருப்பது தான்.
தீப்பெட்டி ஆலைகளும் 2 பெரிய நூற்பாலைகளும் உள்ள கோவில்பட்டி தொகுதியில் உழைப்பாளிகள் வர்க்கத்தினர் அதிகம் இருக்கிறார்கள். அதனால் இங்கு கம்யூனிஸ்ட்களின் ஆதிக்கம் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும். இதுவரை 16 பொதுத் தேர்தல்களைச் சந்தித்திருக்கும் இந்தத் தொகுதியில் அதிமுக, திமுக கூட்டணி பலத்துடன் இதுவரை 7 முறை வென்றிருக்கிறது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. அடுத்ததாக 5 முறை அதிமுக-வும், 3 முறை காங்கிரஸ் கட்சியும் கோயில்பட்டியில் கொடிநாட்டி இருக்கின்றன. ஒரு தேர்தலில் சுயேச்சையையும் பேரவைக்கு அனுப்பி அதிசயம் நிகழ்த்தி இருக்கிறார்கள் கோவில்பட்டி மக்கள்.
கோவில்பட்டி தொகுதியில் 1962, 1989, 2001, 2016 என நான்கு முறை போட்டியிட்ட திமுக ஒருமுறைகூட வெற்றிக் கனியை எட்டிப் பறிக்கவில்லை. கடைசியாக, 2016 தேர்தலில் வெறும் 428 வாக்குகள் வித்தியாசத்தில் இங்கு இரட்டை இலையிடம் தோற்றும் போனது உதயசூரியன். அதனால் 2021-ல் தொகுதியை சிபிஎம்-மிற்கு தந்துவிட்டது திமுக. அதனால் தொடர்ந்து நான்காவது முறையாக கோவில்பட்டியை தக்கவைத்துக் கொண்டது அதிமுக.
இந்த நிலையில், இம்முறை கோவில்பட்டியில் உதயசூரியனை உதிக்கவைக்க வேண்டும் என திமுக-வினர் டீக்கடை பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறார்கள். தொகுதிப் பக்கம் வந்து போகும் அமைச்சர்களும் எம்பி-யான கனிமொழியும், “இம்முறை திமுக இங்கு போட்டியிட்டால் கட்டாயம் வெற்றிபெற வைக்க வேண்டும்” என உடன்பிறப்புகளுக்கு உரமேற்றிக் கொண்டே வருகிறார்கள்.
1978-ல் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது தான் சீவலப்பேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தைச் செயல்படுத்தி கோவில்பட்டி குடிநீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதன்பிறகு மீண்டும் 2011-ல் கோவில்பட்டிக்கான இரண்டாவது குடிநீர் திட்டத்தையும் திமுக தான் அறிவித்தது. ஆனால் இந்தத் திட்டத்தை, அடுத்து வந்த அதிமுக ஆட்சிதான் செயல்படுத்தியது. இதுமாத்திரமல்லாது, 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில், செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானம், அரசு கலைக்கல்லூரி உள்ளிட்டவையும் கோவில்பட்டிக்கு கிடைத்தன.
செவிலியர் கல்லூரி, கால்நடை பல்கலைக்கழகத்தின் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம் உள்ளிட்ட திட்டங்களையும் அதிமுக ஆட்சியில் அறிவித்தாலும் அது இன்னும் செயல்வடிவம் பெறாமலேயே நிற்கிறது. இதேபோல், கோவில்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் கவனிப்பாரற்றுக் கிடக்கிறது. இந்தத் திட்டங்கள் எல்லாம் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே செயல்வடிவம் பெறும் என அதிமுக-வினர் பேசிவரும் நிலையில் தான், இம்முறை கோவில்பட்டியில் உதயசூரியன் உதிக்க வேண்டும் என திமுக-வினர் உரக்கப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
இதுகுறித்து கோவில்பட்டி வடக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளரான தா.ஏஞ்சலா சின்னத்துரை நம்மிடம் பேசுகையில், “பெண்களுக்கான மகளிர் உரிமைத் தொகை, தோழியர் விடுதி, விடியல் பயணம் திட்டங்கள், மாணவர்களுக்கான நான் முதல்வன், தமிழ்புதல்வன், புதுமைப்பெண் திட்டங்கள், மக்களைத் தேடி மருத்துவம், காலை உணவுத்திட்டம், தாயுமானவன் திட்டங்கள் என ஏகப்பட்ட திட்டங்களை தந்திருக்கிறார் எங்கள் முதல்வர் ஸ்டாலின். கோவில்பட்டி 2-வது குடிநீர் திட்டப்பணிகளை அரைகுறையாக விட்டுச் சென்றுவிட்டது அதிமுக ஆட்சி. எங்கள் ஆட்சியில் தான் அது முழுமைபெற்றது. கோவில்பட்டி தொகுதி மீது எங்கள் எம்பி-யான கனிமொழியும் சிறப்புக் கவனம் எடுத்து வருவதால் இம்முறை கண்டிப்பாக இங்கே திமுக ஜெயிக்கும் பாருங்க” என்றார்.
இதற்கு பதிலளித்த தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக வர்த்தக அணி செயலாளரான வி.எஸ்.டி.பி.ராமர், “2011-ல் கோவில்பட்டி 2-வது குடிநீர் திட்டத்துக்கு அடித்தளம் போட்டதே எங்களது எம்எல்ஏ-வான அண்ணன் கடம்பூர் ராஜுதான். அவரது கோரிக்கையை ஏற்று அம்மா அந்தத் திட்டத்துக்கு ரூ.81.82 கோடி ஒதுக்கினார். பணிகள் முடிந்து அந்தத் திட்டத்தை எடப்பாடியார் 2018-ல் மக்களுக்கு அர்பணித்தார். அதிமுக ஆட்சி இருந்த வரைக்கும் கோவில்பட்டியில் தினமும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. ஆனால், இப்போது வாரத்துக்கு ஒருமுறை தான் தண்ணீர் வருகிறது.
எங்கள் ஆட்சியில் தான் கயத்தாறு தனி தாலுகா, கோவில்பட்டிக்கென தனியாக வட்டார போக்குவரத்து அலுவலகம், கழுகுமலை சுற்றுலாத்தலமாக அறிவிப்பு, நகராட்சிக்கு ரூ.5 கோடியில் புதிய கட்டிடம் என அத்தனையும் வந்தது. இன்னும் மக்களுக்குத் தேவையான எண்ணற்ற திட்டங்களை அவர்கள் கேட்காமலேயே செயல்படுத்தியதால் தான் அதிமுக இந்தத் தொகுதியில் தொடர்ச்சியாக வெற்றிபெற்று வருகிறது. அந்த வெற்றியானது இந்தத் தேர்தலிலும் தொடரும். ஏனென்றால், இது அதிமுக கோட்டை. தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் திமுக இங்கு வெற்றிபெறவே முடியாது” என்றார்.
உழைக்கும் தோழர்கள் நிறைந்திருந்தும் கடந்த முறை சிபிஎம் கட்சிக்கு மூன்றாமிடத்தைக் கொடுத்த கோவில்பட்டி வாக்காளர்கள், இம்முறை உதயசூரியன் போட்டியிட்டால் அதற்கு எத்தனை மார்க் போடுகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.