கு மாரபாளையம் கிராமத்தில் நண்பர்களாக இருக்கிறார்கள் சிவசாமியும் (விஜய் கவுரிஷ்), சாமிநாதனும் (ஆதர்ஷ்). வேலை ஏதுமில்லாமல் சுற்றிக் கொண்டிருக்கும் சிவசாமி, பேருந்து நிலையத்தில் நின்று பெண்களைப் பார்ப்பதை வேலையாகச் செய்துவருகிறார்.
பேனர் எழுதுபவரான சாமிநாதன், நினைத்தால் வேலை, இல்லை என்றால் மது என சுகமாக வாழ்ந்து வருகிறார். ஊருக்குப் புதிதாக வரும் சுமதியை (ஸ்மேகா), இருவருமே காதலிக்கிறார்கள். அவரும் இருவரிடமும் தனித்தனியாகக் காதலிப்பதாகச் சொல்கிறார். இது ஒரு கட்டத்தில் பிரச்சினையாகி விடுகிறது. சுமதி ஏன் இருவரையும் காதலிப்பதாகச் சொன்னார் , அவர் யாரைக் காதலித்தார் என்பதை அழகான மெசேஜோடு சொல்கிறது படம்.
கல்லூரி செல்லும் இளம் பெண்கள் எதிர்கொள்ளும் காதல் டார்ச்சர், காதலிக்க வற்புறுத்தும் பிரச்சினைகளை வைத்து ‘கடுக்கா’வைக் கொடுத்திருக்கிறார், அறிமுக இயக்குநர் எஸ்.எஸ். முருகராசு.
படத்தின் தொடக்கக் காட்சிகள் மெதுவாக நகர்ந்தாலும் காதல் கடிதம் கொடுத்த பிறகு நடக்கும் விஷயங்கள் கதையை இழுத்துச் செல்கின்றன. குறைந்த கதாபாத்திரங்களைக் கொண்டு, எளிமையான கதையை நேர்மையாகச் சொல்லிருக்கும் இயக்குநரைப் பாராட்டலாம். கிளைமாக்ஸில் நாயகி கேட்கும் கேள்விகள் நியாயமானதாகவே இருக்கின்றன.
மணியாக வரும் மஞ்சுநாதன், சுதாவாக வரும் ஆராயி,மணிமேகலை என அக் கதாபாத்திரங்களுக்கான நடிகர்கள் தேர்வும் அவர்களின் கொங்கு பேச்சுவழக்கும் கச்சிதம். ஒரு பெண், தங்களுக்குள் வந்த பிறகு, நண்பர்கள் எப்படி விரோதியாகிறார்கள், தங்களை எப்படி மாற்றிக் கொள்கிறார்கள் என்பதை இயல்பான காட்சிஅமைப்புகளின் வழி சொல்கிறது படம்.
நாயகர்களாக நடித்திருக்கும் விஜய் கவுரிஷ், ஆதர்ஷ் இருவரும் தங்கள் கேரக்டருக்கு நியாயம் சேர்த்திருக்கிறார்கள். நாயகி ஸ்மேகா, சின்னப் பெண்ணைப் போல தோன்றினாலும் நன்றாக நடித்திருக்கிறார்.
கெவின் டி கோஸ்டின் இசையில் தேவா பாடியிருக்கும் பாடல் படம் முழுவதும் வருவது இனிமையாக இருக்கிறது. பின்னணி இசையில் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். சதீஷ்குமார் துரைக்கண்ணுவின் ஒளிப்பதிவு, ஒரு கிராமத்தைக் கண் முன் கொண்டு நிறுத்துகிறது.
ஜான்சன் நோயலின் படத்தொகுப்பும் சிறப்பாக இருக்கிறது. குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது என்பது படத்தில் தெரிந்தாலும் அது கதையை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. இதுபோன்ற படங்களுக்குப் பார்வையாளர்கள் ஆதரவு கொடுக்கலாம்.