ராமேசுவரம்: தமிழக மீனவர்கள் 5 பேருக்கு ரூ.7 லட்சத்து 30 ஆயிரம் அபராதமும், 2 மீனவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற ஆரோக்கிய டேனியல் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் பெரிக், சீனு, சசிக்குமார், முக்கூரான், முத்து சரவணன், காளிதாஸ், செந்தில் ஆகிய 7 மீனவர்கள் 30.06.25 அன்று பாக் நீரிணை பகுதியில் தலைமன்னார் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர்.
7 மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். மீனவர்களின் காவல் இன்று (வெள்ளிக்கிழமை) நிறைவடைந்ததை தொடர்ந்து 7 மீனவர்களும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி 7 மீனவர்களில் 5 மீனவர்களுக்கு தலா இலங்கை ரூபாய் 5 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். 5 மீனவர்களுக்கும் மொத்த அபராதம் இலங்கை ரூ.25 லட்சம் ஆகும். இதன் இந்திய மதிப்பு ரூ.7 லட்சத்து 30 ஆயிரம் ஆகும். எஞ்சியுள்ள 2 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் 2-வது முறையாக சிறைபிடிக்கப்படுவதால் தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
மேலும் 28.07.25 அன்று சிறைபிடிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களுக்கு செப்டம்பர் 12-ம் தேதி வரையிலும், 22.07.25 அன்று சிறைபிடிக்கப்பட்ட 4 தமிழக மீனவர்களுக்கு செப்டம்பர் 4-ம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அபராதம் விதிக்கப்பட்டுள்ள 5 மீனவர்கள் அபராதத் தொகையை செலுத்தியதும் விடுதலை செய்யப்படுவார்கள்.