சென்னை: கடலில் மீன் பிடிக்க செல்லும்போது உடல் நலக்குறைவால் பாதிக்கப்படும் மீனவர்களை காப்பாற்ற கடல் ஆம்புலன்ஸ் சேவையை ஏற்படுத்த வேண்டும் என்று எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன தலைவர் சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இந்திய கடலோர பகுதிகளுக்கான பல் வகை ஆபத்து சேவைகள் குறித்த கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது. இதில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன தலைவர் சவுமியா சுவாமிநாதன் பங்கேற்று பேசியது: “மீனவர்கள் நலன் காக்க எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் ‘மீனவ நண்பன்’ என்ற ஸ்மார்ட் போன் செயலியை உருவாக்கி இருக்கிறோம். அதில் வானிலை நிலவரம், காற்று வீசும் திசை, வேகம், மீன்கள் அதிகமாக இருக்கும் இடங்கள் போன்ற தகவல்களை வழங்கி வருகிறோம். ராட்சத அலை, வெப்பநிலை தொடர்பாகவும் தகவல்களை வழங்க திட்டமிட்டிருக்கிறோம்.
மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கும் போது, மாரடைப்பு போன்ற பல்வேறு உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. இது அரிதான நிகழ்வும் இல்லை. தொடர்ந்து இதுபோன்று நடைபெறுகிறது. அப்போது அவர்களை காப்பாற்ற முடியாமல் இறக்க நேரிடுகிறது. நிலப் பகுதிகளில் அரசு சார்பில் ஆம்புலன்ஸ் சேவை உள்ளது. ஆனால் கடலில் இல்லை. அதனால் கடல் ஆம்புலன்ஸ் சேவையை அவசியம் ஏற்படுத்த வேண்டும்.
கடலோர பகுதிகளில் வசிக்கும் மீனவர்களுக்கு ரத்த அழுத்த நோய் அதிகமாக உள்ளது. இதற்கு சரியான காரணத்தை யாரும் கண்டறியவில்லை. சிங்கப்பூரில் கிளைமேட் லேப் ஒன்றில் பார்வையிட்டபோது, சமமான வேகத்தில் ஓடும் ட்ரெட் மில்லில், வெவ்வேறு வெப்ப நிலை சூழலில் ஓடும் மனிதர்களின் இதயத்துடிப்பை ஆய்வு செய்தபோது, வெப்பம் அதிமாக உள்ள பகுதியில் ஓடுபவரின் இதயம் அதிமாக துடிக்கிறது.
பருவ நிலை மாற்றம் காரணமாக கடலோரப் பகுதிகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதன் தாக்கத்தாலும், கடலோரப் பகுதிகளில் காற்றின் ஈரப்பதம் அதிகமாக இருப்பதாலும், இயல்பான வெப்பநிலை கூட அதிக வெப்ப நிலையாக உணரப்படுகிறது. இதனால் கடலோரப் பகுதிகளில் உடலுழைப்பு அதிகமாக உள்ள மீனவ மக்களுக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இதை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். தமிழக கடலோரப் பகுதியில் சுனாமி தாக்கியபோது, அலையாத்தி காடுகள் அதிகமாக உள்ள பகுதிகளில் பாதிப்பு குறைவாக இருந்தது. அதனால் கடலோரப் பகுதிகளில் அலையாத்தி காடுகளை அதிகரிக்க வேண்டும்” என்று சவுமியா சுவாமிநாதன் கூறியுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய உறுப்பினர் லெப்டினென்ட் ஜெனரல் சையது அடா ஹஸ்னயின் பங்கேற்று பேசியது: “பேரிடர் தொடர்பான முன்னெச்சரிக்கைகளை வழங்க சாசெட் (SACHAT) என்ற செயலி பயன்பாட்டில் உள்ளது. இது ஸ்மார்ட் போனை சைலென்ட் மோடில் வைத்திருந்தாலும், முன்னெச்சரிக்கை தகவல் வரும் போது, அபாய ஒலியை எழுப்பும். இதற்கு முன்பு, ஒரு குறிப்பிட்ட பகுதியில் முன்னெச்சரிக்கை வழங்கும் சேவையில், அப்பகுதியில் செயல்பாட்டில் உள்ள ஸ்மார்க் போன்களின் எண்களை சேகரிக்கும்.
முன்னெச்சரிக்கை குறுஞ்செய்திகள், முதலில் சேகரிக்கப்பட்ட எண்ணுக்கு முதலிலும், கடைசியாக பட்டியலில் உள்ள எண்ணுக்கு கடைசியாகவும் செல்லும். இதனால் முன்னெச்சரிக்கை குறுஞ்செய்தி சென்று சேர்வதில் தாமதம் ஏற்படுகிறது. அதனால் இப்போது, செல்ப் பிராட் காஸ்ட் சிஸ்டம் என்ற முறையை சோதனை அடிப்படையில் வரும் செப்.1ம் தேதி முதல் செயல்படுத்த இருக்கிறோம். இதில் அனைத்து எண்களுக்கும் ஒரே நேரத்தில் குறுஞ் செய்திகள் சென்று சேரும்” என்று சையது அடா ஹஸ்னயின் கூறினார்.
இன்காய்ஸ் (INCOIS) நிறுவன இயக்குநர் பால கிருஷ்ண நாயர் பேசியது: ”இந்நிறுவனம், வானிலை ஆய்வு மையத்துடன் இணைந்து சுனாமி, ராட்சத கடல் அலை தொடர்பான முன்னெச்சரிக்கைகளை வழங்கி வருகிறது. 2004 சுனாமி பேரிடருக்கு பிறகு, சுனாமி தொடர்பான முன்னெச்சரிக்கை தகவல்களை பெறும் தொழில் நுட்பம் பன் மடங்கு மேம்பட்டுள்ளது. இப்போது கடலில் மிதவைகளை நிலை நிறுத்தி நிலநடுக்கம், சுமாமி போன்ற முன்னெச்சரிக்கைகளை பெற்று வருகிறோம்.
இதில் சில தாமதங்கள் உள்ளன. அதனால் அந்தமான் பகுதியில் கடலுக்கடியில் 270 கி.மீ ஆழத்தில் கேபிளை பதித்து, நில நடுக்கம், சுனாமி போன்ற முன்னெச்சரிக்கை தகவல்களை உடனுக்குடன் பெற முடிகிறது. இதுபோன்ற முன்னெச்சரிக்கை தகவல்களை மேலும் வலுப்படுத்த, பல்வேறு துறையினரை ஒருங்கிணைத்து வருகிறோம்” என்று பால கிருஷ்ண நாயர் கூறினார்.
இந்நிகழ்வில் மத்திய அரசின் பத்திரிக்கை தகவல் பணியக தென் மண்டலத் தலைவர் பழனிசாமி, என்ஐஓடி (NIOT) இயக்குநர் பாலாஜி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.