சென்னை: பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் ஆற்றில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சிகரமான செய்தியாக உள்ளது என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் யுவராஜா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் முகாம்கள் நடத்தி மக்களிடம் மனுக்களை பெறும் வகையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற புதிய திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜூலை 15-ம் தேதி தொடங்கி வைத்தார். இந்த முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு உரிய பயனாளிகளின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். எனவே, பொதுமக்கள் முகாம்களில் மட்டுமே விண்ணப்பங்களை பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் மக்கள் வழங்கும் மனுக்கள் மீது அதிகபட்சம் 45 நாட்களில் தீர்வு காணப்படும் என அரசு அறிவித்திருக்கும் நிலையில், இதுவரை நடந்த முகாம்கள் மூலம், லட்சக்கணக்கான மனுக்கள் பெறப்பட்டு இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், முதல்வர் தொடங்கி வைத்த ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் குறித்து பல்வேறு அதிருப்தி நிலவி வரும் நிலையில், இந்த முகாம் முழுமையாக ஆளுங்கட்சியினரால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதுடன், அவர்கள் அழைத்து வருபவர்களே மனுக்களை கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
முகாம் முழுமையாக திமுகவினர் கட்டுப்பாட்டிலே நடைபெறுவதால், மாற்று கட்சியினர் அங்கு செல்லவே தயங்கும் நிலை உள்ளது. மேலும், அதிகாரிகளும் கைகட்டி, வாய் பொத்தி, பொதுமக்களின் கேள்விக்களுக்கு கூட பதில் தெரிவிக்காத நிலையே உள்ளது. பொதுமக்கள் ஏதேனும் வில்லங்கமாக கேட்டால், அவர்களுக்கு திமுகவினரே மிரட்டும் தோணியில் பதில் அளிப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
சிவகங்கை அருகே கீழடி, கொந்தகை, நெல்முடிக்கரை, மடப்புரம் பகுதியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் பூர்த்தி செய்யப்பட்டு அலுவலர்களிடம் வழங்கப்பட்ட மனுக்கள், வைகை ஆற்றில் தூக்கி எறியப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மக்களின் குறை தீர்த்த மனு நீதிச் சோழன் வாழ்ந்த, ஐந்தறிவு ஜீவன் கூட ஆராய்ச்சி மணி அடித்தவுடன் நீதி வழங்கிய இந்த தமிழ்நாட்டில். இன்று மக்களால், மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி என்று மார்தட்டிக் கொள்ளும் திமுக தலைவர் ஸ்டாலின் மக்களின் புகார் மனுக்களுக்கு கொடுக்கும் மரியாதை இவ்வளவு தானா? மனுக்களையே படிக்காத இவர்கள் மக்கள் குறைகளை எப்படி தீர்க்கப் போகிறார்கள் ?
இவர்களா மீண்டும் விடியலை தரப் போகிறார்கள்? ஆளும் திமுக அரசிற்கு இது ஒன்றும் புதிதல்ல. புகார் கொடுத்தவர்களே ஆற்றில் மிதந்து வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை? ஏனென்றால் நாட்டில் பாலியல் வன்கொடுமை, கொலை, கொள்ளை, போதைப் பொருள் நடமாட்டம், விலைவாசி ஏற்றம் என மக்கள் வாழ முடியாத சூழ்நிலை தமிழகத்தில் நிலவிக் கொண்டிருக்கிறது. ஏதோ மத்த புகார்கள் மீது நடவடிக்கை எடுத்த மாதிரி, இந்த மனுக்கள் ஆற்றில் தவறி விழுந்து விட்டது. அனைத்தும் தீர்க்கப்பட்டு விட்டது என்று சொல்லி இன்னொரு நாடகத்தை அரங்கேற்றுவார்கள் திமுகவினர்.
சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்பதே திமுகவின் தாரக மந்திரம் என அடிக்கடி திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக மக்களுக்கு நினைவூட்டி கொண்டிருக்கிறார்கள். 2021-ல் ஆட்சிக்கு வந்தவுடன் மக்களிடம் மனுக்களைப் பெற்று உடனடியாக தீர்வு காணப்படும் என்று சொன்ன வாக்குறுதிகள் இன்று வரை கானல் நீராகவே போய்விட்டது. இப்போது ஆட்சி முடியும் தருணத்தில் புதிதாக ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்று ஒரு பெயர் சூட்டி பொதுமக்களை ஏமாற்றுகின்ற அரசாக மீண்டும் ஒருமுறை உங்கள் பொய்களை மக்களிடம் அரங்கேற்ற துடிக்கின்றீர்கள்?
முதல்வருடைய கைகளுக்கு சென்று சேரும் என்ற அடிப்படையில் கோரிக்கை மனுக்களை மக்கள் நம்பி பல்வேறு முகாம்களில் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி கொடுக்கப்பட்ட மனுக்கள் ஆற்றில் வீசப்பட்டு இருக்கின்றது என்பது அதிர்ச்சிகரமான செய்தியாக உள்ளது. இது நம்பி வாக்களித்த மக்களை திட்டமிட்டு ஏமாற்றும் செயலாகும். இதை மக்கள் தெளிவாகக் கண்டு கொண்டுள்ளனர். இனியும் பொய்யான பிரச்சாரங்கள் மூலம் பொதுமக்களை ஏமாற்ற வேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்” என்று யுவராஜா கூறியுள்ளார்.