தூத்துக்குடி: அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் அந்நாட்டுக்கு கப்பல் மூலம் அனுப்பப்பட்ட 500 டன் கடல் உணவு நடுவழியில் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளதாக கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக இந்திய கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தமிழ்நாடு தலைவர் செல்வின் பிரபு தூத்துக்குடியில் இன்று (ஆக.29) செய்தியாளர்களிடம் கூறியது: “இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்துள்ளது. இந்த வரி விதிப்பால் இந்திய ஏற்றுமதி பெருமளவு பாதிக்கப்படும். அமெரிக்காவுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.24 ஆயிரம் கோடி கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த வர்த்தகத்தை ஒரே இரவில் நிறுத்தம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு இறால் மீன் ஏற்றுமதி அதிகம் நடைபெறுகிறது. இந்த வரி விதிப்பால் இறால் ஏற்றுமதியில் நாம் போட்டியை இழந்து விடுவோம். நமக்கு 50 சதவீதம் வரி என்று இருக்கும் போது, நமது போட்டி நாடான இந்தோனேசியா, ஈக்குவடார் மற்றும் இதர நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 17, 18 சதவீதம் வரிதான் உள்ளது.
இந்திய இறாலின் விலை அமெரிக்க சந்தையில் கூடுவதால் அமெரிக்காவில் இந்திய இறால் வாங்கும் வியாபாரிகள் அனைவரும் ஆர்டர்களை கேன்சல் செய்கின்றனர். சமீபத்தில் நாங்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்த கண்டெய்னர்கள் பாதி தூரம் சென்ற நிலையில், அந்த கண்டெய்னர்களை அனுப்ப வேண்டாம், திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள் என்று அமெரிக்க இறக்குமதியாளர்களிடம் இருந்து எங்களுக்கு இ-மெயில் வந்துள்ளது.
இதை மீறி அமெரிக்காவுக்கு இறால் மீன் வந்தால் அதை நாங்கள் எடுக்க மாட்டோம். எனவே பாதி வழியிலேயே எல்லா கண்டெய்னர்களையும் திருப்பிக் கொண்டு செல்லுங்கள் என்று வலியுறுத்துகின்றனர். இல்லையென்றால் இந்த 50 சதவீதம் வரியை ஏற்றுமதி செய்யும் நீங்களே கட்டுங்கள், நாங்கள் கட்ட மாட்டோம் என்று கூறுகின்றனர்.

இறால் மீன் தொழில் ஏற்கனவே நலிந்த நிலையில் தான் இருக்கிறது. இதில் 50 சதவீதம் வரியை தாங்குவது என்பது ஏற்றுமதியாளர்களால் முடியாத காரியம். இதனால் அமெரிக்காவுடனான வர்த்தகத்தை முழுமையாக நிறுத்தக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து ஏற்றுமதியான சுமார் ரூ.50 கோடி முதல் ரூ.60 கோடி மதிப்பிலான 500 டன் சரக்குகள் திரும்பி வர வாய்ப்பு உள்ளது.
கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் சார்பாக மத்திய அரசிடம் சில கோரிக்கை விடுத்துள்ளோம். அவர்கள் பரிசீலிப்பதாக எங்களுக்கு வாக்குறுதி கொடுத்துள்ளனர். மானிய விலையில் பல்வேறு பொருளாதார உதவிகள், குறைந்த வட்டியில் வங்கிக் கடன் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளோம். அமெரிக்காவுடன் பேசி 50 சதவீதம் வரியை நீக்கினால் உதவியாக இருக்கும்.
அமெரிக்கா உலகிலேயே பெரிய பொருளாதார நாடு. இந்த பொருளாதாரத்தை சார்ந்து நாங்கள் 20 ஆண்டுகளாக பயணித்துள்ளோம். உடனடியாக எங்களின் இறால் சந்தையை வேற நாடுகளுக்கு மாற்றுவதற்கு நீண்ட நாட்கள் ஆகும். ஏற்கெனவே இறால் உணவை மற்ற நாட்டு சந்தைகளுக்கும் அனுப்பிக் கொண்டு தான் இருக்கிறோம். மேலும் அந்த நாட்டுக்கே இறால் மீன்களை கொடுக்கும் போது விலை அதிகம் குறையும். இந்த சூழ்நிலை வந்தால் மீனவர்களும், பண்ணை விவசாயிகளும்
பாதிக்கப்படுவார்கள்.
நாங்கள் மீனவர்களிடமோ, இறால் பண்ணை விவசாயிகளிடமோ கூடுதலாக விலை கொடுத்து இறால் மீன் வாங்க முடியாது. இதனால் இறால் பண்ணை விவசாயிகள் தற்போது இறால் உற்பத்தியை குறைத்துள்ளனர். அமெரிக்காவில் தான் பெரிய அளவுடைய இறால் வாங்குவார்கள். மற்ற நாடுகளில் சிறிய அளவிலான இறால் தான் வாங்குவார்கள்.
பெரிய இறால் வளர்த்தால் தான் விவசாயிகளுக்கு, மீனவர்களுக்கு லாபம் கிடைக்கும். சிறிய அளவிலான இறால்களை வளர்க்கும் போது அவர்களுக்கும் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதே போன்று கடல் மீன் உணவு ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றும் 50 முதல் 60 சதவீதம் தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது” என்று செல்வின் பிரபு கூறினார்.