தருமபுரி: கள் இயக்கம் சார்பில் ஒற்றை இலக்கை வலியுறுத்தி டிசம்பரில் நடைபெறவிருக்கும் மாநாடு தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று கள் இயக்கம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தருமபுரியில் தெரிவித்தார்.
கள் இயக்கம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி இன்று (ஆகஸ்ட் 29) தருமபுரியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது: சங்க காலத்தில் அரசர்கள், புலவர்கள், ஆண், பெண் என அனைவரும் சமமாக அமர்ந்து கள்ளை அருந்தியுள்ளனர். மன்னர் அதியமானும் அவ்வையாரும் ஒன்றாக அமர்ந்து கள் உண்டதற்கான சாட்சியங்கள் சங்க இலக்கியங்களில் இருக்கிறது.
இந்நிலையில், அவ்வையாருக்கு அதியமான் அரிய நெல்லிக்கனி வழங்கியதை நினைவுகூரும் வகையில் தருமபுரி 4 ரோடு பகுதியிலும், அதியமான் கோட்டத்திலும் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த சிலைகளில் அன்றைய கள் மரபு திட்டமிட்டே மறைக்கப்பட்டுள்ளது. அரசியல் அமைப்புச் சட்டம் கள் இறக்க அனுமதி வழங்கியுள்ள நிலையில் கலப்படம் என்ற காரணத்தை முன்வைத்து தமிழகத்தில் கள்ளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, பாண்டிச்சேரி போன்ற இடங்களில் கள்ளுக்கு அனுமதி உள்ளது. அந்த மாநில அரசுகளால் கலப்பட கள்ளை தடுக்க முடியும்போது தமிழக அரசால் மட்டும் ஏன் முடியாது? முடியாது எனில் ஆட்சியில் இருந்து இறங்கி விடுங்கள்.
நோய்களை குணமாக்கும் தன்மை கொண்ட கள், தடை செய்வதற்கு உகந்த கொடிய தன்மை கொண்ட போதை பொருள் என யாராலும் நிரூபிக்க முடியுமா? வரும் டிசம்பர் மாதம் திருச்சியில் கள் விடுதலை மற்றும் மதுவிலக்கு மாநாடு நடத்த இருக்கிறோம். இந்த மாநாட்டில் பிஹார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.
பிஹாரில் மதுவிலக்கு அமல் படுத்திய போது இதர மதுபானங்களுக்கு தடை விதித்த நிதீஷ் குமார் கள்ளுக்கு மட்டும் அனுமதி தந்தார். அதனால் தான் அவரை சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளோம். அம்மாநிலத்தில் கள் தவிர்த்த இதர மது வகைகளுக்கு மதுவிலக்கு கொண்டு வந்ததன் மூலம் விபத்துக்கள் குறைந்து இருக்கிறது. குடும்பங்களில் அமைதி நிலவுகிறது. தமிழகத்திலோ கள்ளுக்கு தடை விதித்து விட்டு மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது.
கள்ளச் சாராயமும் விற்பனை ஆகிறது. அதைக் குடித்து உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசு வள்ளல் போல் நிவாரணம் வழங்குகிறது. முதலில் கள்ளை எதிர்த்து தென்னை மரங்களை வெட்டி சாய்த்த பெரியார், பிற்காலத்தில் கும்பகோணத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், ‘மருந்துக்கு நிகரான கள்ளின் பயனை அறியாமல், காங்கிரசார் பேச்சை கேட்டு தென்னை மரங்களை வெட்டி சாய்த்து விட்டேன்’ என்று பேசியுள்ளார். பெரியாரை கொண்டாடும் திமுக வினரும், திருமாவளவன் போன்றவர்களும் பெரியார் பற்றிய முழுமையான புரிதல் இல்லாமல் கள்ளை எதிர்க்கின்றனர்.
முன்பு ஒருமுறை தேர்தலின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக வெங்காயம் இருந்தது. அதுபோல தமிழகத்தில் இந்த முறை தேர்தல் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக கள் அமைய இருக்கிறது. கள்ளுக்கு அனுமதி என்ற ஒற்றை இலக்கை மையப்படுத்தி திருச்சியில் நடக்க இருக்கும் மாநாடு தமிழக அரசியலில் பெரும் திருப்புமுனையாக அமைய உள்ளது.
எனவே, முதல்வர் ஸ்டாலின் எங்களை அழைத்து இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு கண்டால், வரும் தேர்தலில் அவர் வெற்றி பெறலாம். அவருக்கு பதிலாக எடப்பாடி பழனிசாமி முந்திக்கொண்டு இந்த விவகாரத்தில் எங்களுக்கு உரிய வாக்குறுதி அளித்தால் அவர் வெற்றி பெறலாம்.
நடிகர் விஜய் இந்த விவகாரத்தை கையில் எடுத்து எங்களுக்கு தீர்வு கூற முன் வந்தால் அவர் வெற்றி பெறலாம். எனவே யார் முந்திக் கொள்கிறார்களோ அவர்களுக்கு தான் வெற்றி கிடைக்கப் போகிறது. பல தொகுதிகளில் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் அளவு வாக்குகள் கள் இயக்கம் வசம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.