சென்னை: தங்கம் விலை இன்று (ஆக.29) ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்தது. பவுனுக்கு ரூ.1040 வரை அதிகரித்து ஷாக் கொடுத்துள்ளது. சவரன் விலை ரூ.76,000-ஐ கடந்து வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது.
முன்னதாக, இன்று காலை, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.9,470-க்கும், பவுனுக்கு ரூ.520 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.75,760-க்கும் விற்பனை ஆனது. கடந்த 8-ம் தேதி இந்த விலையில் ஒரு பவுன் தங்கம் விற்பனையான நிலையில், இன்று மீண்டும் அதே விலையைத் தொட்டது.
தொடர்ந்து பிற்பகலில் மீண்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.520 உயர்ந்தது. தற்போதைய நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.9535-க்கும், ஒரு பவுன் ரூ.76,280-க்கும் விற்பனையாகிறது. நாளை தான் ஒரு பவுன் தங்கம் ரூ.76,000-ஐ கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்றைக்கே அந்த இலக்கைக் கடந்து நகை வாங்குவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.130 என்றளவில் உள்ளது.
தங்கம் விலை சர்வதேச அளவிலான பொருளாதாரம் மற்றும் சந்தை நிலவரத்துக்கு ஏற்பவே நிர்ணயமாகிறது. அந்த வகையில், அமெரிக்கா இந்தியா மீது 50% வரி விதித்துள்ள நிலையில் அதன் தாக்கம் இந்திய தேசத்தின் வர்த்தக துறையில் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் தாக்கம் தங்கம் வெள்ளி வர்த்தகத்திலும் எதிரொலிக்க தங்கம் விலை இன்று ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்துள்ளது.
குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பும் கடும் வீழ்ச்சி கண்டுள்ளதும் இந்த விலை உயர்வுக்கு காரணம். தவிர, இது திருமணங்கள் உள்ளிட்ட சுப காரியங்கள் அதிகமாக நடைபெறும் காலம் என்பதாலும் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது. வரும் நாட்களில் தங்கம் விலை குறைவதற்கான வாய்ப்புகள் மிகவும் சொற்பமானதே என்று நகை வியாபாரிகள் கூறுகின்றனர்.
கடந்த திங்கள் முதல் இன்று வரை தங்கம் விலை நிலவரம்: கடந்த திங்கட்கிழமை தொடங்கிய இன்று வரை தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. ஆகஸ்ட் 25-ம் தேதி திங்கட்கிழமை சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு பவுன் ரூ.74,440 -க்கு விற்பனை செய்யப்பட்டது . இதுவே படிப்படியாக விலை உயர்ந்து இன்று ஒரு பவுன் ரூ.76,280-க்கு விற்பனையாகிறது.