திருவள்ளூர்: மத்திய பாஜக அரசு தமிழக மாணவர்களுக்கு வழங்கும் கல்வித் தொகையை வழங்காததை கண்டித்து திருவள்ளூர் எம்.பி சசிகாந்த் செந்தில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் இன்று காலை திருவள்ளூரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு பார்வையாளர் கூட்ட அரங்கில் இன்று காலை திருவள்ளூர் தொகுதி எம்.பி. சசிகாந்த் செந்தில், மத்திய பாஜக அரசு தமிழக மாணவர்களுக்கு வழங்கும் கல்வித்தொகை வழங்காததை கண்டித்து, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.
உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கிய போது, சசிகாந்த் செந்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, மத்திய பாஜக அரசு, தமிழகத்துக்கு பல்வேறு வகைகளில் தொடர்ந்து இன்னல்களை கொடுத்து வருகிறது. அதில் முக்கியமாக, கல்வி வளர்ச்சியில் மாணவர்களை பாஜக அரசு மிகவும் வஞ்சித்து வருகிறது.
மத்திய அரசு, புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாத மாநிலங்களை தொடர்ந்து புறக்கணித்து நிதி ஒதுக்காமல் வஞ்சித்து வருகிறது. மாணவர்களுக்கு வழங்கும் கல்வித் தொகையை வழங்காததால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.
தமிழகம் முழுவதும் மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என மத்திய பாஜக அரசு வலியுறுத்தி வருகிறது. அதற்கு தமிழ்நாட்டில் மறுப்பு தெரிவிப்பதால், நவயோதயா பள்ளி என்ற பெயரை மாற்றம் செய்து வேறு ஒரு பெயரில் அப்பள்ளியை தமிழகத்துக்கு கொண்டு வர வலியுறுத்தி கையெழுத்து போட வற்புறுத்துகிறார்கள்.
அவ்வாறு செய்ய மறுப்பதால், மத்திய அரசு தமிழகத்தை மிரட்டி அடிபணிய வைக்கப் பார்க்கிறது. இதுகுறித்து நாங்கள் பலமுறை மனு கொடுத்தும் தீர்வு காணப்படவில்லை. எனவே மத்திய பாஜக அரசு தமிழக மாணவர்களுக்கு வழங்கும் கல்வித் தொகையை வழங்காததை கண்டித்தும், உடனடியாக மாணவர்களுக்கு கல்வி தொகையை விடுவிக்க வலியுறுத்தியும் இன்று முதல் கால வரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளேன். இதற்கு, அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சசிகாந்த் செந்திலின் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸின் முன்னாள் தலைவர் ஏ.ஜி.சிதம்பரம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் 20-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று வருகின்றனர்.