சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் மீதான குண்டர் சட்டம் நீடிக்க வேண்டுமா? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அண்ணா பல்கலைகழக மாணவி வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் கைது செய்யப்பட்ட பின் அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்ததால், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.
சென்னை காவல் ஆணையரின் இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி ஞானசேகரரின் தாயார் கங்காதேவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதற்கிடையில், அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்நிலையில், ஞானசேகரனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்து வழக்கு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் வி.லட்சுமி நாரயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கை அடிப்படையாக வைத்து தான் ஞானசேகரன் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார். தற்போது, அந்த வழக்கில் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட உத்தரவு நீடிக்க வேண்டுமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த காவல்துறை தரப்பு வழக்கறிஞர், ஞானசேகரன் மீது மற்ற குற்ற வழக்குகளும் நிலுவையில் உள்ளன. கொடுங் குற்றச் செயல்களை செய்த ஞானசேகரனால் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்பட்டதாக கூறினார்.
மேலும், இது தொடர்பாக விரிவான வாதங்களுக்காக வழக்கை ஒத்திவைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.\ இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.