தனது புதிய வீட்டின் வீடியோ பதிவொன்று இணையத்தில் வைரலானதால் அலியா பட் காட்டமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மும்பையில் ரன்பீர் கபூர் – அலியா பட் இணை பிரம்மாண்டமான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை கட்டியிருக்கிறார்கள். விரைவில் இதில் குடும்பத்துடன் குடியேற இருக்கிறார்கள். இதன் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் சமயத்தில், இந்த குடியிருப்பின் வீடியோ பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
பல்வேறு வழிகளில் இருந்து அடுக்குமாடி குடியிருப்பின் வீடியோக்கள் இணையத்தில் உலா வருகின்றன. இது தொடர்பாக காட்டமாக அறிக்கை ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அலியா பட். அதில், “மும்பை போன்ற ஒரு நகரத்தில் இடம் குறைவானது என்பதை நான் புரிந்துக் கொள்கிறேன். சில நேரங்களில் உங்கள் ஜன்னலின் பார்வை அடுத்தவர் வீடாக இருக்கலாம். ஆனால் அதற்காக எவருக்கும் தனிப்பட்ட வீடுகளை படம் பிடித்து ஆன்லைனில் வெளியிடும் உரிமை இல்லை.
எங்கள் வீடு இன்னும் கட்டுமானத்தில் தான் உள்ளது. அதற்குள் எங்கள் அனுமதி இல்லாமல் படமெடுக்கப்பட்டு பல்வேறு ஊடகங்களால் பகிரப்பட்டுள்ளது. இது தனியுரிமை மீறலும், பாதுகாப்பு சிக்கலுமாகும். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஒருவரது தனிப்பட்ட இடத்தை அவர்களின் அனுமதி இல்லாமல் படம் எடுப்பதும் அல்லது புகைப்படம் எடுப்பதும் அத்துமீறலாகும்.
இதனை சாதாரணமாக ஏற்றுக்கொள்ளக்கூடாது. அதனை பகிரும் முன் சற்று யோசிக்கவும். உங்கள் வீட்டின் உள்ளே எடுக்கப்பட்ட வீடியோ பதிவொன்றை ஒருவர் தெரியாமல் பொது இடத்தில் பகிரப்பட்டால் நீங்கள் ஒப்புக் கொள்வீர்களா? யாருமே ஒப்புக் கொள்ளமாட்டோம். ஆகையால் ஒரு வேண்டுகோள். மற்றவர்களின் வீடியோ பதிவுகளை நீங்கள் இணையத்தில் பார்த்தால், தயவுசெய்து அதை பகிர வேண்டாம் அல்லது மற்றவர்களுக்கு அனுப்ப வேண்டாம்.
எங்களது வீட்டின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்த ஊடக நண்பர்கள், தயவுசெய்து அவற்றை உடனடியாக நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் அலியா பட்.